| ADDED : ஜூலை 06, 2024 02:06 AM
உடுமலை;மடத்துக்குளம் தாலுகா, கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், துங்காவியைச்சேர்ந்தவர், உயில் எழுதி, அதே அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.மேல் பலனை மட்டும் அனுபவிக்கும் உரிமை வழங்கப்பட்ட நபர், 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, உயில் ஆவணம் அடிப்படையில், நில உரிமையாளர்களுக்கு தெரியாமல், பதிவுத்துறை அதிகாரிகள் துணையுடன் விற்பனை செய்துள்ளார்.இவ்வாறு, விவசாயிகள் மற்றும் பொதுமக்களை, ஏமாற்றி ஆவணங்களை உருவாக்கியும், விற்பனை பதிவு செய்தும் வருவதோடு, அரசு மற்றும் கோவில் நிலங்களையும், முறைகேடாக விற்பனை ஆவணம் பதிவு செய்துள்ளனர்.எனவே, கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில், கணியூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் வீரப்பன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாலதண்டபாணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.