பல்லடம்;பல்லடம் வட்டாரத்தில் மின்வெட்டு காரணமாக தொழில்துறையினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.பல்லடம் வட்டாரத்தில், விசைத்தறி, விவசாயம், கறிக்கோழி பண்ணைகள், சாய ஆலைகள், பஞ்சு நுால் மில்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட தொழில்கள் நடந்து வருகின்றன. இவற்றுக்கு மின்சாரம் அத்தியாவசியமாக உள்ளது. சமீப நாட்களாக, பல்லடம் பகுதியில் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்வெட்டு காரணமாக, தொழில்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தொழில் துறையினர், பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். தொழில்துறையினர் கூறுகையில், ''திடீரென, அரை மணி நேரம் ஒரு மணி நேரம் என, மின்சாரம் துண்டிக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், கூடுதல் செலவு ஏற்பட்டு பணிகளும் தடைபடுகின்றன. இதேபோல், பொதுமக்களின் அன்றாட பணிகளும் இதனால் பாதிக்கப்படுகிறது. தடையின்றி மின் சப்ளை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
மின் வாரியம் விளக்கம்
பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் கிருஷ்ணகுமாரிடம் கேட்டதற்கு, ''தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலிலும், எந்தவித தடங்கலும் இன்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், மழையால் அசம்பாவிதம் ஏற்படாமல் பாதுகாக்கவும், மின்தடை ஏற்படாமல் இருக்கவும் உண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழைய உதிரி பாகங்கள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்டவை மாற்றப்பட்டு வருகின்றன. பல பகுதிகளில் உள்ள குறைந்த அழுத்த மின்சாரம் வருவதாக குற்றச்சாட்டு உள்ளதால் அவையும் சரி செய்யப்பட்டு வருகின்றன. இது போன்ற பணிகள் இடையிடையே மேற்கொள்வதால், சிறிது நேரம் மின்தடை ஏற்படுகிறது. பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும் மின்சாரம் சீராக வினியோகிக்கப்படும்'' என்றார்.