உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜி.எஸ்.டி., தாமத வரி வட்டி குறைப்பு ;சட்டசபை எதிரொலித்த வர்த்தகர்களின் குரல்

ஜி.எஸ்.டி., தாமத வரி வட்டி குறைப்பு ;சட்டசபை எதிரொலித்த வர்த்தகர்களின் குரல்

திருப்பூர்;ஜி.எஸ்.டி.,ல் தாமதமாக செலுத்தும் வரிக்கான வட்டியை குறைக்கவேண்டும் என்கிற திருப்பூர் வர்த்தகர்களின் கோரிக்கை, சட்டசபையில் எதிரொலித்ததால் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.திருப்பூர் வரி பயிற்சியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆகியோரிடம், ஜி.எஸ்.டி.,ல் தொழில் துறையினரின் எதிர்பார்ப்பு குறித்து மனு அளித்திருந்தார்.மனுவில் கூறப்பட்டது என்ன?அம்மனுவில் கூறியிருப்பதாவது:ஜி.எஸ்.டி.,ல் மாதாந்திர ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு காலதாமதம் ஏற்படும்போது, நாளொன்றுக்கு 50 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை, மாதம் 500 ரூபாயாக மாற்றி அமைக்கவேண்டும். தாமதமாக வரி செலுத்தும் வர்த்தகர்களுக்கு, 18 முதல் 24 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது; தாமத வரிக்கான வட்டியை 12 சதவீதமாக குறைக்கவேண்டும்.ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வந்த, கடந்த 2017 ஜூலை மாதம் முதல், நடப்பாண்டு ஜனவரி மாதம் வரையிலான பல்வேறு வழக்குகளுக்கு தீர்வுகாணும் வகையில், சமாதான் திட்டம் அறிவிக்கவேண்டும்.வர்த்தகர் நலனை பாதுகாக்கும்வகையில், அகில இந்திய வணிகர் நல பாதுகாப்பு வாரியம் அமைக்கப்படவேண்டும். மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, கடந்த 2017 முதல் சரக்கு மற்றும் சேவை வரிக்கான தேர்வு எழுதி வெற்றிபெற்று, பதிவெண் பெற்ற அனைத்து வரி பயிற்சியாளர்களுக்கும், வரி பயிற்சியாளர் நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். திருப்பூர் வணிக வரி இணை கமிஷனர் அலுவலகத்தில், ஜி.எஸ்.டி.,க்கான மேல் முறையீட்டுப்பிரிவு துவங்கப்படவேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நம்பிக்கையுடன் வர்த்தகர்கள்திருப்பூர் வரி பயிற்சியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் கூறியதாவது:தாமத வரிக்கான வட்டி குறைப்பு உள்பட ஜி.எஸ்.டி., சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து வணிக வரி அமைச்சர் மற்றும் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., ஆகியோரிடம் மனு அளித்திருந்தோம்.'திருப்பூர் வணிக வரி இணை ஆணையர் அலுவலகத்தில், மேல் முறையீட்டு பிரிவு துவங்கப்படவேண்டும். தாமதமாக செலுத்தப்படும் ஜி.எஸ்.டி.,க்கு விதிக்கப்படும் 18 முதல் 24 சதவீத அபராத வட்டி விகிதத்தை, எவ்வளவு குறைக்கமுடியுமோ அவ்வளவு குறைக்கவேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையை பரிசீலித்து, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கவேண்டும்,' என, எம்.எல்.ஏ., செல்வராஜ் சட்டசபை கூட்டத்தில் பேசியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள வர்த்தகர்களின் கோரிக்கையை ஜி.எஸ்.டி., கவுன்சில் நிறைவேற்றிவைக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.இவ்வாறு, முத்துராமன் கூறிானர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை