உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எதிர்கால சந்ததி வாழ காற்று, நீர் பாதுகாப்பது நம் கடமை

எதிர்கால சந்ததி வாழ காற்று, நீர் பாதுகாப்பது நம் கடமை

திருப்பூர் : ''பத்து சதவீத மழைநீரைக்கூட நாம் சேமிப்பதில்லை; எதிர்கால சந்ததியினர் நலமாக வாழ, காற்று, நீரை பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும்,'' என்று கோவை சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் பேசினார்.சுதந்திர தின விழா, 'வெற்றி' அமைப்பின் 25ம் ஆண்டு வெள்ளி விழா, மரக்கன்று நடும் விழா என, முப்பெரும் விழா, மங்கலம், ஜிம்மி கார்டனில் நேற்று காலை நடந்தது. 'வெற்றி' அமைப்பு கவுரவ தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியம், பெடரல் வங்கியின் தமிழக மண்டல தலைமை மேலாளர் ஜித்தேஷ், கோவை சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், கோவை சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் துணை தலைவர் சவுந்தர்ராஜன், எவரெடி குழுமம் தலைவர் சுப்ரமணியம், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன், வனத்துக்குள் திருப்பூர் திட்ட இயக்குனர் குமார் துரைசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.தியாகம் செய்ய வேண்டும்'வெற்றி' அமைப்பின் தலைவர் சிவராம் பேசியதாவது:வெற்றி அமைப்பு மற்றும் 'வனத்துக்குள் திருப்பூர்' வாயிலாக எண்ணற்ற பசுமை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆண்டிபாளையம் குளம் துார்வாரி மீட்டெடுத்து பராமரிக்கப்பட்டது. மாநகராட்சி அறிவியல் பூங்கா என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 'வனத்துக்குள் திருப்பூர்' வாயிலாக, ஒரத்துப்பாளையம் அணையில், ஆயிரம் ஏக்கருக்கு மரக்கன்றுகளை நட அனுமதி கிடைத்துள்ளது. அணையை சுற்றியுள்ள விவசாயிகள் நிறைய பேருக்கு பல நம்பிக்கை வாக்குறுதிகளை கொடுத்து வருகிறோம். ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை பின்பற்றினாலும், சிலர் தவறு செய்து விடுகின்றனர். இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் இருக்க வேண்டும். ஆறு, குளங்களை கெடுப்பதில்லை என்ற நிலை வர வேண்டும் என்றால், சில தியாகங்களை செய்ய வேண்டும். குழந்தைகள், பேரக்குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்றால், இந்த ஆறு நன்றாக இருக்க வேண்டும்.இவ்வாறு, சிவராம் பேசினார்.பொறுப்பேற்க வேண்டும்சிறுதுளி நிர்வாக அறங்காவலர், வனிதா மோகன் பேசியதாவது:கடந்த, 21 ஆண்டுகளாக துார்வாரிய குளங்களில் எல்லாம் தற்போது சாக்கடை கழிவு நீர் உள்ளது. அந்த சாக்கடையை எப்படி சுத்தம் செய்வது என்று பல்வேறு நவீன யுத்திகள் மூலம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்கான திட்டம் விரைவில் அமல்படுத்த உள்ளோம். வெளிநாடுகளில் ஆறு, ஏரிகளில் சுத்தமான நீர் உள்ளது. இதுபோன்ற நிலையை நாம் இங்கு உருவாக்க வேண்டும். மரங்கள் இல்லையென்றால், மனித இனத்தை பூச்சிகள் அழித்து விடும் என்று கூறுவர். மரங்களை அழித்தால், அழிய போவது மனித இனம் தான். காற்று, தண்ணீர் இல்லாமல் யாரும் இயங்க முடியாது. இதைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. தற்போது பெய்த மழையில், 10 சதவீதம் தண்ணீரை கூட நாம் சேமிக்கவில்லை. அனைத்தும் சாக்கடை கால்வாய்க்கு தான் சென்றது. சுத்தமான தண்ணீரை கொண்டு வரவும், தண்ணீரை சேமிக்க வேண்டும். ஒவ்வொருவரும் பொறுப்பை எடுத்து கொண்டால், கொங்கு மண்டலம் பகுதி சுகாதாரமான, சுத்தமான, இயற்கை வளம் மிக்க பகுதியாக விரைவில் மாறும்.இவ்வாறு வனிதாமோகன் பேசினார்.ரூ.75 லட்சம் நிதிஇந்த ஆண்டின் இலக்கான, மூன்று லட்சம் மரங்களில், ஒரு லட்சம் மரங்களின் செலவு தொகையான, 75 லட்சம் ரூபாயை, திருப்பூர் பெடரல் வங்கி, சி.எஸ்.ஆர்., நிதி மூலம் வழங்கியது. சிறுதுளி வனிதா மோகன், வெற்றி அமைப்புக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். 'வெற்றி' அமைப்பின் வெள்ளி விழாவை முன்னிட்டு, 12,500 மரங்களை நட்டு கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் துவக்கமாக, நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டு துவக்கி வைக்கப்பட்டது.

திருப்பூர் முன்னோடி

'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 20 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன. இதனை சொல்லும் போது, அனைவரும் வியப்புடன் கேட்டு பாராட்டுகின்றனர். வருங்கால சந்தியினரை பாதுகாப்பதே, நமது குறிக்கோள். 'ஜீரோ டிஸ்சார்ஜ்' முறைக்கு சொந்தமானவர்கள் திருப்பூர்காரர்கள். இதனை நாங்களே கண்டுபிடித்தோம். உலகம் முழுவதும் இருந்து திருப்பூருக்கு வருபவர்கள், இதனை சொல்லி கொடுக்குமாறு கேட்கின்றனர். ஒவ்வொரு விஷயத்திலும், திருப்பூர் முன்னோடியாக விளங்கி வருகிறது. - சக்திவேல் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை