திருப்பூர்;தாராபுரம், குண்டடம், காங்கயம், பல்லடத்தில், ஏ.டி.எம்., மையங்களுக்கு பணம் எடுக்க செல்லும் முதியவர்களை நோட்டமிட்டு, ஏ.டி.எம்., கார்டை மாற்றி, பணத்தை எடுத்து கைவரிசை காட்டி வந்தனர். இதுதொடர்பான புகார்களை போலீசார் விசாரித்து வந்தனர்.கடந்த, 13ம் தேதி தாராபுரம், தளவாய்பட்டினத்தை சேர்ந்த முத்துராஜ், 33 என்பவர், தாராபுரத்தில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றார். அங்கு வந்த வாலிபர் ஒருவர் பணம் எடுப்பது போல் நடித்து, ஏ.டி.எம்., கார்டை மாற்றி சென்றார்.இது தெரியாமல், பல முறை முயற்சித்தும் பணம் எடுக்க முடியவில்லை. சிறிது நேரத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து, 30 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ்., வந்தது. அதிர்ச்சியடைந்த முத்துராஜ், தாராபுரம் போலீசில் புகார் அளித்தார்.இதுதொடர்பாக ஏ.டி.எம்., மையம் 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஏ.டி.எம்., கார்டை மாற்றி கைவரிசை காட்டிய, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம், 30, என்பவரை கைது செய்தனர்.இவர் உடுமலையில் தங்கி, ஏ.டி.எம்., மையங்களுக்கு பணம் எடுக்கும் முதியவர்களை நோட்டமிட்டு, கடந்த, 10 மாதங்களாக கைவரிசை காட்டியது தெரிந்தது.