விசுவசேனரிடம் பெற வேண்டும் அனுமதிஅர்த்த மண்டபத்தில் விசுவசேனர் எழுந்தருளியுள்ளார். இவரை விசுவக்சேனர், சேனை முதலியார், சேனாதிபதி ஆழ்வார் என்றும் அழைப்பர். இவரே திருமால் கோவில்களுக்கு உரிய அதிகாரி. கோவில் நிர்வாகம் இவருடையதே. அர்ச்சகர்கள் வழிபாட்டைத் தொடங்குமுன் விசுவசேனரைச் சென்று பார்த்த பின்பே வழிபாட்டைத் துவங்குவர். அவரது அனுமதி பெற்று பூஜையை நிறைவு செய்வர். வழிபாடு முடிந்து விசுவசேனரைப் பார்த்தே அர்ச்சகர்கள் புறப்பட வேண்டும் என்பது வைணவ மரபு.பெருமாள் கோவிலுக்கு வழங்கும் கொடைகள் விசுவக்சேனர் பெயரிலேயே கொடுக்கப்படும். சிவாலயங்களில் சண்டிகேஸ்வரர் போல் பெருமாள் கோவில்களில் விசுவக்சேனர்.விசுவக்சேனர் தோற்றத்துக்கு வரலாறு உள்ளது. ஒருமுறை துர்வாசர் செய்த தர்மத்தைக் கெடுக்க இந்திரன் குந்தளை என்ற தேவப் பெண்ணை அனுப்பினார். குந்தளையை வேடப் பெண்ணாக துர்வாசர் சபித்தார். அவள் பாப விமோசனம் வேண்ட 'நற்குணம் உடைய மகன் உள் வயிற்றில் பிறக்கும் போது நீ மீண்டும் தெய்வமகள் ஆவாய்' என்றார்.வீரவாகு என்னும் வேடனுக்கு சுவற்கலை என்னும் பெயருடைய பெண்ணாகப் பிறந்த குந்தனை பத்திரன் என்பவனை மணந்தாள். ஒருநாள் நர்மதையில் நீராடி மரநிழலில் இருந்த போது வருணன் அனுக்கிரகத்தால் விசுவசேனர் சுவற்கலைக்குப் பிறந்தார். காசியப முனிவரிடம் கல்வி கற்றுத் தவ வலிமையால் சேனை முதலியார் ஆனார்.திருவரங்கம் கோவில் இரண்டாம் பிரகாரத்தில் சேனை முதலியார் கோவில் உள்ளது.துளசியின் சிறப்புவிண்ணகரங்களில் பிரசாதமாக வழங்கப்பெறும் துளசி மிகப் புனிதமானது. திருமாலை அடைய விரும்பித் துளசி தவம் செய்தது. துளசி கார்ப்பு மணம் உடைய மிகச் சிறந்த மூலிகை, துளசியில் நல்ல துளசி, கருந்துளசி, செந்துளசி, கற்பூரத்துளசி, காட்டுத் துளசி, சிவத்துளசி, சிறு துளசி, பெருந்துளசி, நிலத்துளசி என்னும் பலவகை உண்டு.துளசி பற்றித் திருமால் கூறுவது:துளசி எல்லோராலும் விரும்பப்படுவது, மூன்று உலகங்களிலும் சிறந்தது. என் சன்னதியில் எல்லா மலர்களைக் காட்டிலும் துளசியே சிறந்தது. துளசியின் ஜலத்தில் எல்லாப் புண்ணிய தீர்த்தங்களும் அடங்கியுள்ளன. துளசி இலையின் தீர்த்தம் ஒருவன் மேல் விழ அவனுக்கு எல்லாப் புண்ணியமும் ஏற்படும். தேவர்கள் அனைவரும் துளசியின் அடியில் வசிக்கின்றனர்.துளசி தாளம் பதினாயிரம் கோதானம் செய்த பலனைத் தரும். துளசி நீர் மரண காலத்தில் எவன் மேல் படுகிறதோ அவன் வைகுண்டம் அடைவான். எவன் ஒருவன் துளசிக் கட்டையால் செய்த மணிகளை அணிகிறானோ அவன் அசுவமேத யாகம் செய்த பலன் பெறுவான்.பிரசாதம் பெற்று வைகுண்டத்தில் பாகவதரும், வானவரும் சேவித்து நிற்கும்ம் விஷ்ணு மூர்த்தியை சாமளாபுரத்தில் வணங்கிப் பேறு பெறலாம்.* காஞ்சிபுரத்திலிருந்து அழைத்து வரப்பட்ட வைணவ பட்டர் குடும்பத்தினரே இன்றளவும் பூஜை செய்கின்றனர். பாஞ்சராத்திர ஆகமப்படி இங்கு மிகச் சிறப்பாக வழிபாடு நடை பெறுகிறது.14ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள்சாமளாபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் இரு கல்வெட்டுகள் உள்ளன. இரண்டுமே 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை. இக்கல்வெட்டுகளை இந்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவினர், 1978ம் ஆண்டு படியெடுத்துள்ளனர்.* முதல் கல்வெட்டின் பொருள்:1902 ம் ஆண்டு மே முதல் தேதி நான்கு திசையிலும் உள்ள பதினெட்டு மண்டலத்திலும் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்கின்ற பதினெண் விஷயத்தார் சாமளாபுரம் பட்டணப் பகுதியில் கூடி தங்கள் விற்பனைப் பொருளின் தன்மைக்கு ஏற்ப மகமையை சாமளாபுரம் அருளாள நாதப் பெருமாளுக்கு வைகாசித் திருவிழா நடத்த ஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்த கல்வெட்டு.எருதுகளின் மீதும் தோணியிலும் வணிகப் பொருட்கள் வந்தன. புடவை, மிளகு, நுால், நெல் இவற்றுடன் ஆட்டுக்கிடாய், எருமை, பசு, குதிரை, யானை, ஒட்டகம் விற்பனைக்கு வந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.* இரண்டாவது கல்வெட்டின் பொருள்:14 ம் நூற்றாண்டில், வீரசோழ வளநாட்டில் வாரக்க நாட்டில் மணியோடு நல்லூர் ஆன சாமளாதேவிச் சதுர்வேதிமங்கலத்து அல்லாள நாதப் பெருமாளுக்கு வாயறைக்கா நாட்டுச் சபையார் கொடை கொடுக்க ஒப்பந்தம் செய்து கொண்டதை இக்கல்வெட்டு கூறுகிறது. இக் கல்வெட்டின் பெரும்பகுதி அழிந்து விட்டதால் ஒப்பந்த விவரம் குறித்து முழுமையாகத் தெரியவில்லை.