உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதர்க்காடுகளாக மாறிய நகராட்சி பூங்காக்கள் மக்களுக்கு பயன்படாமல் வீண்

புதர்க்காடுகளாக மாறிய நகராட்சி பூங்காக்கள் மக்களுக்கு பயன்படாமல் வீண்

உடுமலை:உடுமலை நகராட்சி பகுதியிலுள்ள வீட்டு மனைகளுக்கு ஒதுக்கப்பட்ட பூங்கா, அண்ணா பூங்கா என அனைத்து பூங்காக்களும் மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் வீணாகி வருகிறது. பூங்காக்களை முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.உடுமலை நகராட்சியில், 300க்கும் மேற்பட்ட வீட்டு மனைகள் உள்ளன. புதிய வீட்டு மனைகள் அமைக்கும் போது, பொது உபயோகம், ரோடு, மைதானம், பூங்கா, திறவிடம் ஆகிய பயன்பாடுகளுக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என்ற விதி உள்ளது.தமிழ்நாடு பூங்கா, விளையாடும் இடம் மற்றும் திறவிடம் பாதுகாத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம், 1959ன் படி, நகராட்சி நிர்வாகம் சார்பில், இந்நிலங்களை முறையாக பாதுகாக்கவும், மக்கள் பயன்பாட்டிற்கு இருக்க வேண்டும், என்ற விதி உள்ளது.20 ஆண்டுக்கு முன், 120க்கும் மேற்பட்ட பூங்கா, பொது ஒதுக்கீடு நிலம், திறவிடம் என நகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் காணப்பட்டது.உடுமலை நகராட்சி பகுதிகளில், இவ்வாறு, நுாற்றுக்கும் மேற்பட்ட பூங்கா, பொது ஒதுக்கீடு நிலங்கள் இருந்த நிலையில், வீட்டு மனைகள் அங்கீகாரம் வழங்கும் போது, நகராட்சி வசம் பொது ஒதுக்கீடு இடங்கள் ஒப்படைக்காதது மற்றும் ஒப்படைத்த நிலங்களையும் முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட காரணங்களினால், பெரும்பாலான நிலங்கள் மாயமானது.தற்போது நகராட்சி பகுதிகளில், பழமையான அண்ணா பூங்கா மற்றும் புதிய லே - அவுட்கள் அமைக்கப்பட்ட போது, அமைக்கப்பட்ட பூங்காக்கள் என, 55 மட்டுமே கணக்கில் உள்ளது.உடுமலையில் பொழுது போக்கு அம்சங்கள் ஏதும் இல்லாத நிலையில், குழந்தைகள் விளையாடுவதற்கும், பொதுமக்களுக்கு, நடைபயிற்சி, விளையாட்டு, இளைஞர்களுக்கான விளையாட்டு மையங்கள் என எந்த விதமான பொழுது போக்கு அம்சங்களும் இல்லை.தற்போது, 55 பூங்காக்கள் குறித்து பட்டியல் இருந்தாலும், அவற்றில் ஒன்று கூட மக்கள் பயன்பாட்டில் இல்லை.நுாற்றாண்டு பழமையான அண்ணா பூங்கா, பல முறை மேம்படுத்த நிதி என பல கோடி ரூபாய் செலவழித்தும் பயனில்லை. தற்போது நுாற்றாண்டு விழா நிதியின் கீழ், 3 ஆண்டுகளாக பராமரிப்பு பணி 'ஆமை' வேகத்தில் நடந்து வருகிறது.இருந்த கட்டமைப்புகளும் உடைக்கப்பட்டு, புதர் மண்டி காணப்படுவதோடு, தற்போது, மது அருந்தும் மையமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது.அதே போல், 55 பூங்காக்களுக்கு கம்பி வேலி அமைக்கப்பட்ட கணக்கு உள்ளது. ஆனால், அவை பசுமையான பூங்காவாக மாற்றப்படாமலும், பராமரிப்பு இல்லாமலும், கம்பி வேலிகள், சிதைக்கப்பட்டு, மீண்டும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றன.மேலும், 4 ஆண்டுக்கு முன், வேலன் நகர், சிங்கப்பூர் நகர், அண்ணா குடியிருப்பு, வாசவி நகர் விரிவு, ருத்ரவேணி லே - அவுட், சந்தோஷ்நகர், சந்த்ரோதயா கார்டன், ஸ்டேட் பாங்க் காலனி, வாசவி நகர், எம்.பி., நகர், அனுஷம் நகர், டி.ஆர்.என்., கார்டன், ஆர்.கே., லே- அவுட் என, 13 இடங்களில், பூங்கா அமைத்தல், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் என ஒவ்வொரு பூங்காவிற்கும், தலா, ரூ. 10 லட்சம் வீதம், 1.30 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது.இவையும், பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படாமலும், பராமரிப்பு இல்லாமலும், புதர் மண்டி காணப்படுகின்றன.அதே போல், நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், நகராட்சிக்கு சொந்தமான, அண்ணா பூங்கா, ஜி.டி.வி., நகர், ஸ்டேட் பாங்க் காலனி, சாத்விக் நகர், ராஜலட்சுமி நகர் பகுதியிலுள்ள பூங்காக்கள், 1.42 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு, கூடுதலாக சிறுவர் விளையாட்டு சாதனங்களுடன் சிறுவர் பூங்கா அமைக்க பணிகள் துவங்கின. இப்பணிகளும் முடிவடையாமல், இழுபறியாகி வருகிறது.எனவே, நகராட்சி பகுதியிலுள்ள அனைத்து பூங்கா நிலங்கள் குறித்து, விரிவான ஆய்வு செய்து அவற்றை மீட்க வேண்டும். தற்போது, நகராட்சி வசம் உள்ள பூங்காக்களை, புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடவும், பராமரிப்பு பணிக்கு, தொழிலாளர்களை நியமிக்க வேண்டும்.அதே போல்,விளையாட்டு மைதானம், பொது உபயோக இடங்களை மீட்டு, மக்களுக்கு பயனுள்ள வகையில் மாற்றவும், நகராட்சி நிர்வாகத்தினர் கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி