| ADDED : ஜூன் 18, 2024 10:55 PM
உடுமலை;குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாமல், ஊராட்சி நிர்வாகத்தினர் அலட்சியம் காட்டுவதால், பள்ளபாளையம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.உடுமலை ஒன்றியம், பள்ளபாளையம் ஊராட்சிக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கிராமத்தில், 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, கிராமத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.குடிநீருக்காக மக்கள், பல கி.மீ., துாரம் சென்று, வாகனங்களில், தண்ணீர் பிடித்து வர வேண்டியுள்ளது. பாதுகாப்பற்ற குடிநீர் அருந்துவதால், பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படும் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.இதனால், அக்கிராம மக்கள் அருகிலுள்ள கிராமங்களிலும், விளைநிலங்களிலும் இருந்து தண்ணீர் பிடித்து வர முடியாத நிலையில் உள்ளனர். இத்தகைய சூழல் நிலவினாலும், ஊராட்சி நிர்வாகம் தரப்பில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.கிராம மக்கள் கூறுகையில், 'குடிநீர் வினியோகத்தில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண, ஊராட்சி நிர்வாகத்தினர் அலட்சியம் காட்டுகின்றனர். புகார் தெரிவிக்க ஊராட்சி அலுவலகத்துக்கு சென்றாலும், அங்கு யாரும் இருப்பதில்லை. உடனடியாக பாதுகாப்பான குடிநீர் வினியோகிக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடும் நிலை உருவாகும்,' என்றனர்.