| ADDED : மார் 21, 2024 11:42 AM
திருப்பூர்;லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், திருப்பூரில் கட்சி கொடி உற்பத்தி மற்றும் விற்பனை சூடு பிடிக்க துவங்கவில்லை.தேர்தல் பிரசாரம், பொதுகூட்டம் என்றாலே முதலிடம் பிடிப்பது அரசியல் கட்சிகளின் கொடிகள் தான். வழக்கமாக தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், திருப்பூரில் கட்சி கொடிகளின் உற்பத்தியும், விற்பனை பரபரப்பாக துவங்கி நடக்கும். இதை உற்பத்தி செய்யும் இடங்களில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு கொண்டு ஆர்டர் கொடுப்பது வழக்கம்.கடந்த வாரம் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழகத்துக்கு முதல் கட்டமாக ஏப்., 19 ம் தேதி நடக்க உள்ளது. தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிகள் இன்னும் முழுமையாக முடியாமல் உள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தேர்தல் நேரங்களில் சூடு பறக்கும் உற்பத்தி மற்றும் விற்பனை மந்தமாக உள்ளது.இதுகுறித்து கட்சி கொடிகளை தயாரித்து வரும் சரவணக்குமார் கூறியதாவது:தேர்தல் திருவிழா துவங்கியதும் கட்சிகள் கொடி தயாரிப்பு, பேட்ஜ் போன்ற பலவற்றுக்கு ஆர்டர் கொடுப்பார்கள். இம்முறை அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி முடிவு, வேட்பாளர் தேர்வு போன்ற பலவற்றை காரணமாக ஆர்டர் இதுவரை வரவில்லை. ஓட்டுப்பதிவுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், பிரசாரமும் இன்னும் துவங்காமல் உள்ளது. உற்பத்தி செய்ய, இரு வாரங்கள் தேவைப்படும் நிலையில், ஆர்டர் கொடுக்க வருபவர்கள், ஒரு வாரத்துக்குள் தயாரித்து தர கேட்கின்றனர். இதனால், உற்பத்தி செய்வது சிரமமாக இருக்கும். அடுத்த வாரத்தில் தான் உற்பத்தி, விற்பனை தெரிய வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.