| ADDED : ஆக 10, 2024 12:13 AM
திருப்பூர்:மருத்துவ பரிசோதனை முகாமில், மாற்றுத்திறனாளிகளின் துயர் போக்க, ஒழுங்குபடுத்துதல் அவசியமாகிறது.திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.பதிவு புதுப்பித்தல், புதிய அடையாள அட்டை பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகள் மற்றும் உறவினர்கள் நுாற்றுக்கும்மேற்பட்டோர் காலை, 8:45 மணி முதலே வரத்துவங்கினர்.மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமோ, முகாம் நடத்துவதில் எவ்வித முறைப்படுத்துதலையும் மேற்கொள்வதில்லை. விண்ணப்பம் பூர்த்தி செய்வற்காகவும், மருத்துவர்களிடம் பரிசோதனைக்கு செல்வதற்காக, மாற்றுத்திறனாளிகள் முண்டியடிக்கின்றனர்.காலையில் முதலிலேயே வந்த மாற்றுத்திறனாளிகள் பலர், பரிசோதனை முடிந்து, அடையாள அட்டை பெற்று வீடு திரும்ப மாலை நேரமாகிவிடுகிறது.இதை தவிர்ப்பதற்காக, மாற்றுத்திறனாளிகள் கஷ்டமான வழிமுறையை கடைபிடிக்க துவங்கிவிட்டனர். மருத்துவ பரிசோதனை நடைபெறும் கூட்ட அரங்கம் முழுவதும் நுாற்றுக்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டுள்ளன.இருக்கையில் அமர்ந்தால் பின்னுக்கு தள்ளப்படுவோம் என்கிற நிலையில், மாற்றுத்திறனாளிகள் யாரும் இருக்கையில் அமர்வதில்லை. உடல் பாதிப்புகளையும் பொருட்படுத்தாமல், மருத்துவர்கள் முன், பல மணி நேரம் வரை வரிசையில் காத்துநிற்கின்றனர்.அடையாள அட்டை பெறுவதற்காக வரும் மாற்றுத்திறனாளிகள், தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் இந்த நிலை தவிர்க்கப்படவேண்டும். மாற்றுத்திறனாளிகளின் வருகை நேர அடிப்படையில், 'டோக்கன்' வழங்கியோ அல்லது வேறு ஒழுங்குபடுத்த வேண்டும். இருக்கைகளில் வரிசையாக அமரவைத்து, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி, அடையாள அட்டை வழங்க வேண்டும்.