உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரிசைகட்டும் வாரிசுகள்... களைகட்டும் காட்சிகள்!

வரிசைகட்டும் வாரிசுகள்... களைகட்டும் காட்சிகள்!

''ஸ்ஸ்ஸ்ப்பா... வெயில் கொளுத்துது... பிரசாரமும் அனல் பறக்க ஆரம்பிக்குது... முடியல''வியர்வையில் குளித்தபடி வந்தாள் மித்ரா.''மித்து... இந்தா கூலான லெமன் ஜூஸ்... அவிநாசில 12ம் தேதி சி.எம்., ஸ்டாலினும், பாண்டியன் நகர்ல 10ம் தேதி இ.பி.எஸ்.,சும் பொதுக்கூட்டத்துல பேசப்போறாங்க... பெரும் கூட்டத்தைத் திரட்டறதுக்காக இப்பவே தி.மு.க., - அ.தி.மு.க., காரங்க தீவிரமா களமிறங்கீட்டாங்க''''ஆமாக்கா... ஏற்கனவே பிரதானக்கட்சி வேட்பாளருங்க பிரசாரத்தை ஆரம்பிச்சிட்டாங்க... ஆனாலும், இன்னும் சூடுபிடிக்கல...''''ஆமாமா... கூட்டணின்னு வந்துட்டாலே கூட்டணிக் கட்சிக்காரங்களை 'தாஜா' பண்றதுக்கே நேரம் போதமாட்டேங்குது... திருப்பூர்ல இந்திய கம்யூ., - அ.தி.மு.க., - பா.ஜ., வேட்பாளர்கள் களத்துல நிக்குறாங்க...''கூட்டணிக்காரங்களை கரெக்ட் பண்ணி பிரசாரத்துக்கு அவங்களையும் சேர்த்துட்டுப் போனாத்தான் மதிப்பு... சின்ன பிரச்னைனாலும் கோபிச்சுக்கறாங்க... துட்டுப்பிரச்னையையும் சரி பண்ணியாகணும்''''உண்மைதாங்க்கா... அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவா பிரேமலதா பிரசாரத்தை முடிச்சுட்டுப் போயிட்டாங்களே''''ஆமாமா... ஆனா... திருப்பூர்ல யாரு நிக்கிறாங்கன்னு பிரேமலதா கேட்டாங்களாம்... தே.மு.தி.க., தான் கூட்டணில பிரதானக்கட்சி. திருப்பூர்ல அ.தி.மு.க., நிக்குதுன்னு மாஜி எம்.எல்.ஏ., குணசேகரன் ஓடோடிவந்து சொன்னாராம்''''ஆமாக்கா... அரசியல்வாதிங்க ேஹாம்ஒர்க் பண்ணீட்டு வர்றதில்ல... அவங்கவங்க கட்சி வேட்பாளரோட பேரு தெரியாம நோட்டீசைப் பார்த்துச் சொல்றது... பக்கத்துல இருக்கறவர்ட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிறது... வேட்பாளர் பேரைத் தப்பா சொல்றதுன்னு கூத்தெல்லாம் தொடர்ந்து அரங்கேறிட்டுத்தான் வருது''

கைக்காசு போச்சு

''பிரேமலதா பிரசாரத்துல அதிக கூட்டத்தைக் காட்டணும்கறதுக்காக ஆட்களை கூட்டிட்டு வந்திருக்காங்க... இதுக்கான செலவை அ.தி.மு.க., சார்பில் தர்றதா சொன்னாங்களாம். தே.மு.தி.க., மாவட்ட முக்கிய நிர்வாகி ஒருத்தர், கட்சிக்காரங்களை அதிகளவுல ஆட்களைத் திரட்டி வரச்சொன்னாராம். ஒரு ஆளுக்கு 200 ரூபா கொடுக்கறதா சொல்லியிருக்காங்க...''ஆனா, கூட்டம் முடிஞ்சதும் அ.தி.மு.க., காரங்க பணம் தரலையாம்; தே.மு.தி.க., மாவட்ட நிர்வாகியும் 'எஸ்கேப்' ஆயிட்டாராம். கூட்டீட்டு வந்த ஆளுங்க பணம் இல்லாமல் போகமாட்டோம்னு மல்லுக்கட்ட, கட்சி நிர்வாகிகள் தங்கள் கைக்காசைப் போட்டு அவங்கள அனுப்பிச்சிருக்காங்க''''அட... பாவமே''''மித்து... கைக்காசு போட்டு செலவு பண்ணுனீங்கன்னா வீட்டை விட்டே அனுப்பிச்சுருவோம்னு ஒரு நிர்வாகியோட ஒய்ப் கோபப்பட்டாங்களாம். ரொம்பவே வருத்தப்பட்டாரு அந்த நிர்வாகி''மித்ராவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

வாரிசுகள் 'களம்'

''சரியாச்சொன்ன மித்து... திருப்பூர்ல வாரிசு அரசியல் 'துாள்' கிளப்புது போல... ஏற்கனவே தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வராஜ் மகன் களமிறங்கிட்டாரு... இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயனோட மகன் பாரதி, 'நவீன மனிதர்கள்'ன்ற பேர்ல அமைப்பு நடத்துறாரு... அவரும் இப்ப தந்தைக்கு ஆதரவா களமிறங்கியிருக்காரு...''கேட்டா... நான் கம்யூ., கட்சியில இல்ல... அப்பா பேச்சைக்கூட இதுவரைக்கும் கேட்டதில்ல அப்படீன்றாரு''''அப்புறம் எதுக்கு பிரசாரம் பண்ணனும்க்கா''''இப்பவே 'துண்டு' போட்டு வைக்கிறாருன்னு விளக்கிச்சொன்னாதான் உனக்கு புரியுமா மித்து...''''கம்யூனிஸ்ட்ல அந்தக் கதையெல்லாம் நடக்குமாக்கா...''''ரெண்டு தடவை எம்.பி., - ரெண்டு தடவை எம்.எல்.ஏ.,வா இருந்த சுப்பராயன், இந்த முறையும் போட்டி போடுறாருல... வேற ஒரு தோழருக்கு 'சீட்'டை விட்டுத்தரலையே... சுப்பராயனுக்காக ரூல்ேஸ வளையுது... எதிர்காலத்துல அவரோட மகனுக்காக வளையாதுன்னு என்ன நிச்சயம்''''சரிதாங்க்கா நீங்க சொல்றது... ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனோட மகன் ஹரி சஷ்டிவேலும் பிரசாரத்துல களமிறங்கீட்டாரமுல்ல...''''ஆமாமா... கோவை தொகுதி பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவா திருப்பூர் வீரபாண்டில ஓட்டு கேட்ருக்காரு... ராதாகிருஷ்ணனோட சித்தப்பா குப்புசாமி, காங்கிரஸ் எம்.பி.,யா இருந்தவரு... இப்ப, ராதாகிருஷ்ணனோட வாரிசுக்கும் அரசியல் ஆசை இல்லாம போகுமா''''ஆமாக்கா... ஆசைப் படற உரிமை எல்லாத்துக்கும் இருக்குக்கா''மித்ரா உள்ளர்த்தத்துடன் சொன்னாள்.

பிரசாரம் சுறுசுறுப்பு

''சித்ராக்கா... பல்லடம் சட்டசபை தொகுதி கோவை லோக்சபா தொகுதிக்குள்ள வருது... பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலையோட பிரசாரம் சுறுசுறுப்பா இருந்துச்சு... ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவது உறுதி; பத்தாயிரம் கோடி செலவாகும்; ஆனாலும் கேரண்டி தர்றேன் என்று பிரதமர் மோடி பாணியில 'பளிச்'ன்னு சொன்னதும், கூடியிருந்த விவசாயிகள் கைதட்டி வரவேற்றாங்களாம். சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு தனிக்குறியீடு; தேங்காய்க்கு சீரான விலைன்னு அண்ணாமலை அளித்த வாக்குறுதிகளையும் விவசாயிகள் வரவேற்றாங்களாம்...''இதெல்லாம் ஓட்டா மாறும்னு பா.ஜ., வினர் நம்புறாங்க''''பல்வேறு மாவட்டங்கள்ல தேர்தல் பிரசாரம் செய்றதோட, தான் போட்டியிடற தொகுதில மூலை முடுக்கெல்லாம் செல்ல வேண்டியிருக்குது... அண்ணாமலை கடுமையா உழைக்கிறதா பா.ஜ., தொண்டர்கள் நெகிழ்ச்சியோட சொல்றாங்க...''சித்ராவிடம் புன்முறுவல்.

பேருக்கு நடவடிக்கை

''தேர்தல் பிரசாரக்கூட்டத்துக்கு வர்றவங்களுக்கு பிரியாணியோட குவார்ட்டர் பாட்டில் தர்றதும் வழக்கம்தாங்க்கா... இப்பவே கட்சிக்காரங்க பார் காரங்களோட கைகோத்து, மதுபாட்டில் களைப் பதுக்க ஆரம்பிச் சுட்டாங்க... பதுக்கிவைக்கிற மதுபாட்டிலை போலீசார் இப்ப பறிமுதல் செஞ்சிட்டு வர்றாங்க...''''நல்ல விஷயம்தானே மித்து''''ஆனா, சும்மா பேருக்குத்தான் போலீஸ் நடவடிக்கை பாயுதாம். மூலனுார் பக்கத்துல பெட்டி பெட்டியா மதுபாட்டில் பிடிச்சுருக்காங்க... ஆளும்கட்சியினர் தலையீடு இருக்கிறது தெரிஞ்சவுடனே சும்மா பேருக்கு நடவடிக்கை எடுத்துருக்காங்க... மாவட்டம் முழுக்க இப்படித்தான் நடவடிக்கையோட லட்சணம் இருக்குதாம்''''அப்ப கூட்டத்துக்கு வந்தா குவார்ட்டர் பாட்டில் ஒண்ணுக்கு ரெண்டாவே கிடைக்கும்னு சொல்லு.... 'குடி'மகன்களுக்குக் கொண்டாட்டம்தான்''''இப்படியே குடிச்சுக்கிட்டே இருந்தா, என்னாகறதுக்கா...'மித்ரா நிஜமாகவே கவலைப்பட்டாள்.

வானளாவிய அதிகாரம்

''சித்ராக்கா... தேர்தல் பணிகள்ல திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஆமை வேகத்துல செயல்படுதுன்னு குற்றச்சாட்டு எழுந்திருக்கு... தேர்தல் கமிஷன் வெளிப்படைத்தன்மையோட செயல்படணும்னு விரும்புது... ஆனா, மாவட்ட நிர்வாகமோ 'ரகசியம்' பேணுது...''உளவுத்துறை போலீசுக்கு மட்டும் வெளிப்படைத்தன்மையோட செயல்படறதா காட்டிக்கிறாங்களாம்... மனு பரிசீலனையப்பவும், சின்ன ஒதுக்கீட்டின் போதும் பத்திரிகையாளர்களை அனுமதிக்கலை... கேட்டா... தேர்தல் அதிகாரியோட அதிகாரம் வானளாவியதுன்னு கமென்ட் பண்றாங்களாம்''''மித்து... தேர்தல் அதிகாரி சூதானமா இருக்காருன்னு சொல்லு''''எப்படியோ... தேர்தல் காட்சிகள் களைகட்ட ஆரம்பிச்சாச்சுக்கா''மித்ரா சொல்வதை சித்ரா ஆமோதித்தாள்.''திருப்பூர்ல கொளுத்துற வெயில்ல வேட்பாளர்கள் எப்படித்தான் பிரசாரம் செய்யப்போறாங்களோன்னு நினைச்சு கவலையா இருக்கு... லெமன் ஜூஸ் குடிச்சும் தாகம் அடங்கல... நல்லா ஜில்லுன்னு மோர் இருந்தா கொடுங்களேன்'' என்று கேட்டாள் மித்ரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை