உடுமலை: மடத்துக்குளம் வட்டாரத்தில், நிலப்போர்வை, மண்புழு உர படுக்கை அமைக்க தோட்டக்கலைத்துறை வாயிலாக, விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ளது. பல்வேறு பயிர்களும் மேற்கொள்ளப்படுகிறது. மாநில அரசும் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தோட்டக்கலைத்துறையினரும் பயிர்களுக்கு தேவையான அறிவுரை, தொழில்நுட்ப வழிமுறைகளை விவசாயிகளுக்கு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தோட்டக்கலைத்துறையினர், நிலப்போர்வை, மண்புழு உர படுக்கை அமைக்க மானியத்தை அறிவித்துள்ளது.இதுகுறித்து, மடத்துக்குளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:பயிர் நன்றாக வளர்வதற்கு, பயிரை சுற்றியுள்ள பகுதிகளில், உரிய வேளாண் கழிவுகளைக் கொண்டு மண் மீது பரப்புவது மண் போர்வை எனப்படுகிறது.இதனால், பயிர் வளர்ச்சிக்கும், மண்ணின் ஈரம் பாதுகாக்கப்படுகிறது. வேளாண் கழிவு பொருட்களான, வைக்கோல், ராகித்தாள், வாழை மட்டை, தென்னை நார்க்கழிவு, சோளத்தட்டை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.வேளாண்மையில் நவீன தொழில் நுட்பமாக, செயற்கை இழை பொருட்களான பாலித்தீன் போன்றவை, நிலப் போர்வையின் உபயோகத்தையும், பயனையும் மாற்றி அமைத்துள்ளது.பாலித்தீன் தாளை நிலப் போர்வையாக பயன்படுத்தும் போது, நீர் ஆவியாதலை கட்டுப்படுத்தி, உப்பு மேல் நோக்கி வருவதையும், மண் அரிப்பினை தடுக்கும்; களைகளை கட்டுப்படுத்துகிறது.இரவு மற்றும் குளிர்காலத்தில் கூட, மண்ணின் வெப்பத்தை சீரான அளவில் நிலைநிறுத்தி பயிர் சிறந்து வளர்வதற்கும், விதைகளின் முளைவிடும் தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் உதவுகின்றன.நிலப் போர்வைகளின் கீழ் ஒட்டிய நிலப்பரப்பில், ஒரு நுண்ணிய தட்பவெப்ப நிலை உருவாகி, நுண்ணுயிரிகளின் விளைவால் கரியமில வாயு அதிகம் உற்பத்தியாகி, தாவரங்களில் அதிக அளவில் ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது. பயிர்களின் தேவை மற்றும் உபயோகிக்கும் பருவம் ஆகியவற்றை பொறுத்து, நிலப்போர்வை தேர்வு செய்ய வேண்டும். அதிக காற்று இல்லாத நேரங்களில் தாள்கள் நிலத்தின் மீது பரப்ப வேண்டும்.நிலப்போர்வை அமைக்க, மடத்துக்குளம் வட்டாரத்தில், ஒரு ஹெக்டேருக்கு, ரூ.16 ஆயிரம் வீதம், 20 ஹெக்டேருக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. மண்புழு படுக்கை
மண்புழுக்கள் அங்கக வேளாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை அங்கக கழிவுகளை மக்க வைத்து உரமாக்கி, மீண்டும் பயிர்கள் கிரகித்துக் கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்கின்றன.மண்ணில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நோய்க்கிருமிகளை மண்புழுக்கள் அழித்து விடுகின்றன. மண்புழுக்களை சுற்றுப்புற சூழ்நிலை அமைப்பாளர்கள் என அழைக்கப்படுகிறது.மடத்துக்குளம் வட்டாரத்திற்கு, ஐந்து மண்புழு படுக்கை அமைக்க விவசாயிகளுக்கு மானியமாக, ஒன்றுக்கு, ரூ.8 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது.மானிய திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், உரிமைச் சான்று, ரேஷன் கார்டு, ஆதார், வங்கிக் கணக்கு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 2 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர், தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், தோட்டக்கலை அலுவலர் காவிய தீப்தினி 99521 47266 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்தார்.