உடுமலை;உடுமலை பகுதிகளில், ரோட்டோரங்களில் உள்ள மரங்களில், ஆணிகள் அடித்து, விளம்பர தட்டிகள் வைக்கப்படுவதால், மரங்கள் காய்ந்து வருகின்றன.உடுமலையில், பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, பழநி ரோடு, கொழுமம் ரோடு, தாராபுரம் ரோடு என அனைத்து ரோடுகளின் இரு புறமும், ஏராளமான மரங்கள் உள்ளன.இந்த ரோடுகளில், 150 ஆண்டுகள் வரை வயதுடைய, புளி, வேம்பு, புங்கன் என ரோடுகளில் செல்லும் வாகனங்களுக்கு, நிழல் தரும் மரங்களாக உள்ளன.வாகன ஓட்டுநர்களுக்கு குளுமையை தருகின்றன. இதில், பள்ளி, கல்லுாரி மற்றும் வியாபார நிறுவனங்களின் விளம்பர தட்டிகள் பொருத்தப்படுவதோடு, அதற்காக நுாற்றுக்கணக்கான ஆணிகள் மரங்களில் அடிக்கப்படுகிறது.இதனால், மரங்கள் காயமடைந்து, நாளடையில் ஒட்டுமொத்த மரமும் காய்ந்து விழுகின்றன. அதே போல், மரங்களின் கீழ், தீ வைத்து அழிக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.இதனைக்கண்டு, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனையடைந்து வருகின்றனர்.சாலையோரம் உள்ள மரங்களின் மீது ஆணி, விளம்பர தட்டிகள் அடிக்கக்கூடாது, மீறுவோருக்கு சிறை தண்டனை, அபராதம் உள்ளிட்ட அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையிலும், விதி மீறி வியாபார நோக்கில், ஆணி அடித்து, விளம்பர பலகைகள் வைத்து மரங்கள் வீணடிக்கப்படுகிறது.எனவே, ரோட்டோர மரங்களில், விளம்பர தட்டி மற்றும் ஆணி அடிப்பவர்கள் மீதும், ஆணிகளை அகற்றி மரங்களை காப்பாற்றவும், நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.