உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓடையில் மழை நீரை சேகரிக்க வழியில்லை பெரியபட்டியில் நீங்காத வறட்சி

ஓடையில் மழை நீரை சேகரிக்க வழியில்லை பெரியபட்டியில் நீங்காத வறட்சி

உடுமலை: மழை நீர் ஓடையில் சீமைகருவேல மரங்களை அகற்றி, தடுப்பணைகளை துார்வார வேண்டும் என, பெரியபட்டி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியம், பெரியபட்டி, ரங்கம்மாபாளையம், கள்ளப்பாளையம்சுற்றுப்பகுதிகளில், தென்னை சாகுபடியும், கால்நடை வளர்ப்பும் பிரதானமாக உள்ளது.கடந்தாண்டில் இருந்து இப்பகுதியில் போதிய மழை பெய்யாமல், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்து விட்டது. கிணறு மற்றும் போர்வெல்களில் தண்ணீர் இல்லாமல், தென்னை மரங்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.பசுந்தீவன வளர்ப்பும் முற்றிலுமாக பாதித்து, கால்நடை வளர்ப்போர் சிரமப்பட்டு வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடும் நிரந்தரமாகியுள்ளது. இப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாக உப்பாறு மழை நீர் ஓடை மட்டுமே உள்ளது.கோவை, திருப்பூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் இருந்து வெளியேறும் மழை நீரும், உப்பாறு அணைக்கு பி.ஏ.பி., பிரதான கால்வாயில் வழங்கப்படும் தண்ணீரும் இந்த ஓடை வழியாகவே செல்லும்.மழை நீரை சேகரிக்க, இப்பகுதியில் மழை நீர் ஓடையின் குறுக்கே, 10க்கும் மேற்பட்ட தடுப்பணைகளும் கட்டப்பட்டுள்ளன. ஆனால், ஓடை பராமரிப்பின்றி பரிதாப நிலையில் உள்ளது.சீமை கருவேல மரங்கள் முற்றிலுமாக ஓடை முழுவதும் ஆக்கிரமித்துள்ளது; தடுப்பணைகள் துார்வாரப்படாமலும், தடுப்பு சுவர் இடிந்தும் பரிதாப நிலையில் உள்ளது.இதனால், ஓடையில் நீர் வரத்து இருந்தாலும், தடுப்பணைகளில் தேங்குவதில்லை; உப்பாறு அணைக்கு தண்ணீர் செல்லும் போதும், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்வதில்லை.நீண்டகாலமாக அப்பகுதியில் நிலவும் வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, உப்பாறு ஓடையில் சீமைகருவேல மரங்களை அகற்றி, தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை