உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி கிடைக்குமா? நடப்பாண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு

திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி கிடைக்குமா? நடப்பாண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு

உடுமலை:உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்தி அணையில், கூடுதல் நீர் சேமிக்கும் வகையில், விவசாய நிலங்களை வளமாக்க, வண்டல் மண் எடுத்துக்கொள்ள நடப்பாண்டும் அனுமதியளிக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பி.ஏ.பி., திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு வரப்படும் நீர், பிரதான கால்வாய் வழியாக பாசனத்துக்கு வினியோகிக்கப்படுகிறது.திருமூர்த்தி அணையின் கிழக்கு பகுதியில், 300 ஏக்கர் பரப்பளவு மண் மேடாக உள்ளது. இந்த மண்ணை அகற்றி ஆழப்படுத்த வேண்டும், இதனால், கூடுதலாக, ஒரு டி.எம்.சி., வரை நீர் சேமிக்க முடிவதோடு, பாசன நிலங்களும் பயன்பெறும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இதனையடுத்து, திருமூர்த்தி அணையில், விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதியளிக்கப்பட்டு வருகிறது. கடந்த, 2017ம் ஆண்டு, சர்வே எண் 252, 253ல், 50,600 கனமீட்டர் மண் எடுக்க அரசு அனுமதியளித்தது. 2022ல், சர்வே எண், 254ல், 34 ஆயிரம் கனமீட்டர் மண் எடுக்க அனுமதியளிக்கப்பட்டது. இதில், 17 ஆயிரம் கனமீட்டர் மட்டுமே மண் எடுக்கப்பட்டது. மீதம் இருந்த மண், கடந்தாண்டு விவசாயிகள் எடுத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது.மண் எடுக்கும் விவசாயிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அணையில் எடுக்கப்படும் வண்டல் மண், விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நஞ்சை நிலமாக இருந்தால், இரு ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு ஏக்கருக்கு, 25 கனமீட்டர் அல்லது, 75 டிராக்டர் லோடு வழங்கப்படும்.புஞ்சை நிலமாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு, 90 கனமீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுவதோடு, வேளாண் துறை வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு அனுமதி வழங்கி வருகிறது.இந்நிலையில், நடப்பாண்டு அணை நீர்மட்டம் சரிந்துள்ளது. பருவமழைகளும் தாமதமாகி வரும் நிலையில், விவசாய நிலங்களை வளமாக்கும் வகையிலும், அணையில் கூடுதல் நீர் சேமிக்கும் வகையிலும், அணையினுள் கிழக்கே உள்ள மேடான பகுதியில், வண்டல் மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'திருமூர்த்தி அணையின் வண்டல் மண் விவசாய நிலங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. ரசாயன உரங்களால் மலடாக மாறிய விவசாய நிலங்களில், வண்டல் மண் கொட்டப்படும் போது, வளம் பெருகுகிறது. எனவே, நடப்பாண்டும் திருமூர்த்தி அணையிலிருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும்,' என்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'திருமூர்த்தி அணையில் மண் எடுக்க, விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அறிக்கை கேட்கும். நடப்பாண்டு, இதுவரை மாவட்ட நிர்வாகம் அறிக்கை கேட்கவில்லை. ஆனாலும், உடுமலை விவசாயிகள் மண் எடுத்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !