பல்லடம்:மகாராஷ்டிராவில், விசைத்தறி மின் கட்டணத்துக்கு கூடுதல் மானியம் வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது, தமிழக ஜவுளி தொழில் துறையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விசைத்தறி காடா துணி உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. தமிழக அரசு, மின் கட்டணம், நிலைக்கட்டணம், பீக் ஹவர் கட்டணம் மற்றும் சோலார் மின் உற்பத்தி கட்டணம் உள்ளிட்டவற்றை கடந்த ஆண்டு உயர்த்தியது.இது, குறு, சிறு தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்தது. இதையடுத்து, தொழில்துறையினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்; மின் கட்டணத்தில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.இருப்பினும், மின் கட்டண உயர்வால், அண்டை மாநிலங்களுடன் போட்டி போட முடியாமல், கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருவதாக ஜவுளி தொழில் துறையினர் புலம்பி வருகின்றனர்.தற்போது, லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில், மின் கட்டணத்துக்கு கூடுதல் மானியம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு மின் கட்டணங்களை உயர்த்தியுள்ள நிலையில், அண்டை மாநிலங்கள் மானியத்துடன் மின்கட்டணத்தை குறைத்து வருவது, தமிழக தொழில் துறையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் கூறுகையில், ''மகாராஷ்டிராவில், விசைத்தறிகளுக்கு மட்டுமன்றி, 27 ஹெச்.பி.,க்கு மேல் உள்ள மோட்டோர்களில் இயங்கும் தானியங்கி தறிகளுக்கும், 75 பைசா மானியம் வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.தொழில் போட்டியை கருத்தில் கொண்டு, அம்மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே, தமிழகத்துக்கும், மகாராஷ்டிராவுக்கும் இடையே, மின் கட்டணத்தில், 3 ரூபாய் வரை வேறுபாடு உள்ளது. மீண்டும் மானியம் தரும்போது, தமிழகத்துக்கு வரவேண்டிய ஆர்டர்கள் நிச்சயம் கைமாறும் அபாயம் உள்ளது. உயர்த்திய மின் கட்டணத்தை குறைத்து மானியம் வழங்க வேண்டும் என, தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் ஜவுளி தொழில் மிகக் கடுமையான பாதிப்பை சந்திக்கும். எனவே, தமிழக அரசு இவ்விஷயத்தில் அலட்சியப்படுத்தாமல் உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கைஉள்ளது'' என்றார்.தமிழக அரசு மின் கட்டணங்களை உயர்த்தியுள்ள நிலையில், அண்டை மாநிலங்கள் மானியத்துடன் மின்கட்டணத்தை குறைத்து வருவது, தமிழக தொழில் துறையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது