திருப்பூர்:திருப்பூர் மாவட்ட எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் சிலர் மீது 'டாஸ்மாக்' மதுக்கடையில் வசூல், லாட்டரி விற்பனை என, சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அவிநாசி, காங்கயம், பல்லடம், தாராபுரம் மற்றும் உடுமலை என, ஐந்து சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட ஒவ்வொரு ஸ்டேஷன்களில் பணியாற்றும் தற்போதைய எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார், இப்பிரிவில் பல ஆண்டுகளாக நீடிக்கின்றனர்.மூன்று ஆண்டுகளை கடந்தும் பலர் ஒரே இடத்தில் பணியாற்றுகின்றனர். அதில், குன்னத்துார், பெருமாநல்லுார், ஊத்துக்குளி, குடிமங்கலம், கொமரலிங்கம், தாராபுரம் போன்ற இடங்களில், எட்டு முதல், 14 ஆண்டுகள் வரை இப்பிரிவில் மட்டுமே நங்கூரமிட்டு உள்ளனர். சிலர் பெயரளவுக்கு ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு மீண்டும், இதே பிரிவுக்கு சில மாதங்களில் திரும்பி விடுகின்றனர்.இன்னொரு தரப்பு, அவர்களின் பணி திறன் காரணமாக மாற்றப்படாமல் உள்ளனர். புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், பழைய நபர்களையே, அதே சப்-டிவிஷன்களில் பெயருக்கு இடமாற்றம் செய்து பணி செய்ய நேரும் போது, ஸ்டேஷன் குறித்து பல்வேறு தகவல்கள் மூடி மறைக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. எஸ்.பி., தனிப்பிரிவு அலுவலகத்திலும், ஆண்டுக்கணக்காக சிலர் தொடர்ந்து பணிபுரிகின்றனர். பாரபட்சம் பார்க்காமல், எஸ்.பி., இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு போலீஸ் மத்தியில் நிலவுகிறது.இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா கூறுகையில், ''மூன்று ஆண்டுகளை கடந்து பணியாற்றி வரும் தனிப்பிரிவு போலீசார் மட்டுமல்லாமல், மாவட்டத்தில் உள்ள மற்ற போலீசாரும் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். ''இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிரண்டு நாட்களில் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்,'' என்றார்.