| ADDED : நவ 28, 2025 05:41 AM
திருப்பூர்: திருப்பூர் - தாராபுரம் ரோடு, என்.எச்., ரோடாக உள்ளது. தென் மாவட்டங்களை தாராபுரம் வழியாக திருப்பூருடன் இணைக்கும் முக்கியமான ரோடாக இந்த ரோடு உள்ளது. மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து அரசு மருத்துவமனை, கோவில் வழி பஸ் ஸ்டாண்ட் வழியாக இந்த ரோடு செல்கிறது. இப்பகுதியில் என்.எச். ரோடு வளைவாகவும், தாழ்வாகவும் செல்கிறது. மேலும், ரோடு மிகவும் வழுவழுப்பாக இருப்பதால், வாகனங்களின் டயர்கள் வழுக்கிச் செல்கின்றன. இதனால், வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு நடந்த பல விபத்தில், வாகனங்கள், தெரு விளக்குகள், சென்டர் மீடியன் சேதமடைவது, போக்குவரத்து அவதி என இது தொடர்ந்து ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், இப்பகுதியில் ரோட்டை சரி செய்ய வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், அப்பகுதியில் அதிக வழுக்கலாகவும், தாழ்வாகவும் ரோடு அமைந்துள்ள பகுதியில் 'மில்லிங்' முறையில் ரோட்டை சீரமைக்கும் நடவடிக்கையை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர். இதனால், இது போன்ற வாகனங்கள் சறுக்கியும், வழுக்கியும் விபத்தில் சிக்குவது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.