பல்லடம்: பல்லடம் பஸ் ஸ்டாண்டில், 'இன்' மற்றும் 'அவுட்' என, இரண்டு ஆட்டோ ஸ்டாண்டுகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 40 டிரைவர்கள் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகின்றனர். இரண்டு நாள் முன், புதிதாக சிலர் இந்த ஸ்டாண்டில் இணைந்ததை தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாழ்வாதாரம் பாதிப்பதால், புதிதாக யாருக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஆட்டோ டிரைவர்கள், பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய பல்லடம் போலீசார், 64 பேரை கைது செய்தனர் மேலும், பஸ் ஸ்டாண்ட் நகராட்சிக்கு சொந்தமானது. எனவே, ஆட்டோக்கள் நிறுத்துவதற்கான அனுமதியை நாங்கள் வழங்க முடியாது என்றும்; மாவட்ட நிர்வாகத்தை அணுகுமாறும் போலீசார் அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவோடு இரவாக, நகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டது. அதில், 'இந்த இடம் நகராட்சிக்கு சொந்தமான பஸ் ஸ்டாண்டுக்கு உட்பட்டது. இங்கு, இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் நிறுத்த அனுமதி இல்லை,' என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, வாகனங்கள் நிறுத்தாதபடி, இப்பகுதியைச் சுற்றிலும் பேரிகார்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ஆட்டோ ஓட்டுபவர்கள் யாரும் நேற்று ஆட்டோக்களை எடுத்து வரவில்லை. கலெக்டரை சந்தித்து முறையிடுவதாக கூறி, இரண்டு நாட்கள் ஆட்டோக்கள் இயக்குவதில்லை என தீர்மானித்துள்ளனர்.