உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிட்டுக்குருவி மீது பட்டுப்போகக்கூடாது அன்பு

சிட்டுக்குருவி மீது பட்டுப்போகக்கூடாது அன்பு

பல்லடம்:''சிட்டுக்குருவிகள் மனிதர்களை நம்பி வாழ்பவை; அவற்றுக்கு நாம் தான் அடைக்கலம் தர வேண்டும்'' என்று சூழலியலாளர் கோவை சதாசிவம் கூறினார்.பல்லடம் அருகே, கோடங்கிபாளையத்தில் உள்ள 'மகிழ்வனம்' தாவரவியல் பூங்காவில், சர்வதேச சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு, குருவிகள் அடைகாக்கும் பெட்டிகள் வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். பூங்கா செயலாளர் சோமு, கவுரவ தலைவர் மாரப்பன், ஆராய்ச்சியாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சூழலியலாளர் கோவை சதாசிவம் பேசியதாவது:சிட்டுக்குருவிகளை அடைக்கலம் குருவி என்று சங்க இலக்கியங்களில் கூறப்படுகிறது. வருங்கால தலைமுறைக்கு ஒற்றுமையை உணர்த்த சிட்டுக்குருவிகளே எடுத்துக்காட்டு.நாம்தான் அவற்றுக்கு அடைக்கலம் தர வேண்டும். இவை, மனிதர்களை நம்பி வாழும் உயிரினம். கடந்த 2,300 ஆண்டுகள் முன்பே சிட்டுக்குருவிகளுடன் வாழ்க்கை கருத்துகளை பகிர்ந்து கொண்ட இனம் தமிழ் இனம்.பாரதியைப் போல் சிட்டுக்குருவி குறித்து கவிதை எழுதிய கவிஞன் உலகில் யாரும் இல்லை. கவிதைகளோடு முடித்துக் கொள்ளாமல், சிட்டுக்குருவிகள் தங்கள் சொந்தங்களோடு மகிழ்ச்சியாக வாழ்வதைக் கண்டு ரசித்தான் பாரதி.வறுமையிலும், வீட்டிலிருந்த அரிசிகளை குருவிகளுக்கு இட்டதை கண்ட பாரதியின் மனைவி கேட்டதற்கு, ''நாம் சாப்பிட்டால் இருவர் மட்டுமே பசியாற முடியும். சிட்டுக்குருவிகள் சாப்பிட்டதால் அவற்றின் இனமே பசியாறி உள்ளன'' என, பசியாற்றுதல் குறித்து பாரதி விளக்கியுள்ளார். பசியாற்ற செய்வது தான் உலகில் மிகச் சிறந்த பணி.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, சிட்டுக்குருவிகளுக்கான ஆயிரம் அடைகாக்கும் பெட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்கள் சீனிவாசன், சசிகுமார், பாஸ்கர், தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.பூங்கா நிர்வாகிகள் உதயகுமார், பூபதி ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்