திருப்பூர்;ரோடு விரிவாக்கத்தால், குழாய் உடைப்பு ஏற்பட்டு வருவதால், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.திருப்பூரில், காங்கயம் கிராஸ் ரோடு விரிவாக்க பணி நடந்து வருகிறது; ரோட்டின் இருபுறமும், சாக்கடை கால்வாய் அமைக்க, குழி தோண்டப்படுகிறது. அப்போது, குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.மாநகராட்சியின், 44, 45 மற்றும் 50வது வார்டுகளுக்கான குடிநீர் வினியோக குழாய்களும், நல்லுாருக்கு செல்லும் மெயின் குடிநீர் குழாய்களும், அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால், வார்டுக்குள் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் நடந்து வரும் நிலையில், சில வீதிகளுக்கு, 12 நாட்களாக குடிநீர் இல்லை.இந்நிலையில், கவுன்சிலர் கண்ணப்பன் கோரிக்கையின்படி, மாநகராட்சி நிர்வாகம், லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. கோடை காலத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், விரைவில் குழாய் உடைப்பு சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'குடிநீர் குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும், ஐந்து லட்சம் லிட்டர் குடிநீர் சாக்கடையில் சென்றது. வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால், கவுன்சிலர் மூலமாக, லாரிகள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையுடன் பேசி, காங்கயம் கிராஸ் ரோடு விரிவாக்க பணிகளை விரைந்து முடித்து, கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்,' என்றனர்.