காசியில் உள்ள பைரவருக்கும் மூத்தவராகவும், முற்பட்டவராகவும் திகழும் அவிநாசி ஆகாஷ காசிகா புராதன பைரவர், பக்தியுடன் பூஜித்து வழிபடும் பக்தர்களின் கவலையை போக்கி, காவலில் நின்றிருப்பார்!திருப்புக்கொளியூர் என்கிற அவிநாசி தலத்து பெருமைகளை வடமொழி ஸ்கந்த புராணம் சிவமான்மிய காண்டம் எனும் பகுதியில், 60 அத்தியாயங்களில் விவரமாக கூறப்பட்டுள்ளது. இதனை தமிழ்மொழியில், அவிநாசி தலபுராணம் எனும் பெயரில், 1,021 பாக்களுடன் இளையான் கவிராயர் மொழிபெயர்த்தார். அதன் வாயிலாக, அவிநாசி திருத்தலத்தின் அருமை, பெருமைகளை இன்றும் அடியவர்கள் அறிய முடிகிறது.பார்வதி தேவி இறைவனை பூஜித்து, வலப்பாகம் பெற்றார்; பிரம்மதேவன்,100 ஆண்டுகள் சிவபூஜை செய்து சாப விமோசனம் பெற்றார். இந்திரனின் ஐராவதம் யானை அவிநாசியப்பரை பூஜித்து இழந்த பதவியை அடைந்தது.அசுர குலத்தில் தோன்றிய தாடகை எனும் அரக்கி, அவிநாசியப்பரை வணங்கி, புத்திரப்பேறு பெற்றாள். ஆதிசேஷன் எனும் நாக அரசனின் மகள் நாககன்னி, திருப்புக்கொளியூர் தலத்தில் பூஜித்து நற்பேறு பெற்றாள். இமய மலையின் தென்பாகத்தில் உள்ள, மாளவ தேசத்தில், இருந்த வியாதன் என்ற வேடர் தலைவன், மூன்று மனைவிகள் இருந்தும் புத்திரப்பேறு இல்லாமல் கவலையுற்றான்.அவிநாசி வந்து தங்கி பூஜைகள் செய்த பின்னரே, புத்திரப்பேறு பெற்றான். சங்க கண்ணன் என்ற வேடனும், அவிநாசியப்பரை தொழுது நற்கதி பெற்றான். இப்படியாக, தேவாதிதேவர்கள், சாதாரண வேடர்கள், அரக்கி உள்ளிட்டோரும், அவிநாசியப்பரின் பாதம் பணிந்து, சிவபூஜை செய்து பெரும் பாக்கியம் பெற்றனர். அந்த வகையில், சிவபெருமானின் பேரருளுக்கு பாத்திரமான வியாதவேடனுக்கு, பைரவர் சன்னதி அருகே தனி சன்னதியும் அமைந்துள்ளது. சிறப்பு வாய்ந்தவர்
அவிநாசி திருத்தலத்தில், மூலாலய உட்பிரகாரத்திலேயே காலபைரவர் காட்சியளிக்கிறார். தனி சன்னதியில் பிரமாண்ட உருவத்துடன், பக்தர்களுக்கு நற்கதி அருளி வருகிறார். புராண இதிகாசங்களில், 64 பைரவ முகூர்த்தங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவிநாசியில் உள்ள பைரவ முகூர்த்தம் மிக சிறப்பு வாய்ந்தது.சிவாலயத்தில் காட்சியளிக்கும் பைரவர், ஆகாஷ காசிகா புராதன பைரவர் என்று அழைக்கப்படுகிறார். காசியில் உள்ள பைரவருக்கும் முற்பட்டவர் என்று சிவாச்சாரியார்கள் கூறுகின்றனர். அவிநாசி திருத்தலத்தில், அவிநாசியப்பருக்கும், அம்பாளுக்கும் அடுத்தபடியாக, சக்தி பெற்றவராக திகழ்கிறார்.பைரவருக்கு வடைமாலை அணிவித்து வணங்கினால், கிடைக்காத பேறில்லை என்கின்றனர். குறிப்பாக, பகைவர்களால் ஏற்படும் பயம் நீங்கவும், வழக்குகளில் வெற்றி கிட்டவும், பவுர்ணமி, அமாவாசை, தேய்பிறை அஷ்டமி திதிகளில், பைவருக்கு வடைமாலை சாற்றி பக்தர்கள் வணங்குகின்றனர்.ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில், தேங்காய், எலுமிச்சை, பூசணிக்காயில், குங்குமம் தடவி, சிவப்பு திரியால் விளக்கேற்றி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்துவர, குடும்பத்தில் ஒற்றுமை நிலவும், மகிழ்ச்சி பெருகும் என, சிவாச்சாரியார்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.