திருப்பூர்;திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது. கலெக்டர் அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.நாடு முழுவதும் எழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில், 39 தொகுதி களுக்கான லோக்சபா தேர்தல், வரும், ஏப்.,19ம் தேதி நடைபெற உள்ளது. இன்று முதல் வரும், 27ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. 28ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனு திரும்பப்பெற, 30ம் தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாக, திருப்பூர் லோக்சபா தொகுதி உள்ளது.இன்று வேட்புமனு தாக்கல் துவங்கும்நிலையில், திருப்பூர் கலெக்டர் அலுவலக இரண்டாவது தளத்தில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை, 11:00 முதல் மதியம், 3:00 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகிறது.வேட்பு மனுக்கள் சரிபார்ப்பது, டிபாசிட் தொகை செலுத்துவது, வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளபடி வேட்பாளர் மற்றும் முன்மொழிபவர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என சரிபார்ப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.வேட்பாளர் பட்டியலில் பெயர் விவரம் சரிபார்க்க, ஆறு சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி பட்டியல் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. கலெக்டர் ஆய்வு
விதிமீறல்களை கண்டறிந்து தடுக்கும்வகையில், கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.தேர்தல் புகார்களை கையாளும் கன்ட்ரோல் ரூம், பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழு வாகன இயக்கம், வேட்புமனு பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டமைப்பு வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு நடத்தினார். டி.ஆர்.ஓ., ஜெய்பீம்,சப்கலெக்டர் சவுமியா உடனிருந்தனர்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் 'டிபாசிட்' நிர்ணயிக்கப்பட்டுள்ளது; எஸ்.சி., - எஸ்.டி., வேட்பாளர்கள், 12,500 ரூபாய் செலுத்தினால் போதும்.வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டபின், வேட்பாளருக்கு தேர்தல் நடத்தை விதிமுறை தொடர்பான கையேடு, செலவு கணக்கு தாக்கல் செய்வதற்கான படிவம் மற்றும் இதர வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படும்.கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் இருந்து, 100 மீ., துாரத்துக்கு, திருப்பூர் - பல்லடம் ரோட்டின் இருபுறமும், எல்லை கோடுகள் வரையப்பட்டுள்ளன. 100 மீ., எல்லையை கடந்து, கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள், வேட்பாளரின் மூன்று வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். வேட்பாளர் மனு தாக்கல் செய்யும்போது, கலெக்டர் அறைக்குள், நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் இருந்து, 100 மீ., துாரத்துக்கு, பல்லடம் ரோட்டின்இருபுறமும், எல்லை கோடுகள் வரையப்பட்டுள்ளன. இந்த எல்லையை கடந்து,வேட்பாளரின் மூன்று வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்தனிக்கணக்குவேண்டும்!வேட்பாளர்கள், தேர்தல் செலவின கணக்குகளை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம், தாக்கல் செய்யவேண்டும். வேட்பாளரின் வரவு - செலவு கணக்குகள் வங்கி கணக்கு மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். எளிதில் தணிக்கை செய்ய ஏதுவாக, போட்டியிலும் வேட்பாளர் பெயரிலோ அல்லது வேட்பாளரால் அங்கீகரிக்கப் பட்ட முகவர் பெயரிலோ, தேர்தல் செலவினங்களுக்கென்று தனியே வங்கி கணக்கு துவக்கப்பட வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து, தேர்தல் முடிவு வெளியாகும்வரை, இந்த கணக்கு செயல்பாட்டில் இருக்கவேண்டும்.