உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிளஸ் 2 தேர்வு மையங்கள் தயாராகின்றன

பிளஸ் 2 தேர்வு மையங்கள் தயாராகின்றன

திருப்பூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ல் துவங்க உள்ள நிலையில், தேர்வு மையங்கள் தயாராகின்றன.வரும், மார்ச் 1ல் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. மாவட்டத்தில், 25 ஆயிரத்து, 688 பேர் தேர்வெழுத உள்ளனர். செய்முறைத்தேர்வு கடந்த 12ல் துவங்கி நடந்து வருகிறது. நேற்று, தேர்வெழுத மாணவ, மாணவியருக்கு தலைமை ஆசிரியர் மூலம் ஹால் டிக்கெட் வினியோகிக்கப்பட்டது.பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து, திருப்பூர், கே.செட்டிபாளையம், விவேகானந்தா வித்யாலாயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தேர்வு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குனர் மணிவண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம் முன்னிலை வகித்தார்.பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறவுள்ள 92 மையங்களில் பணிபுரிய உள்ள முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர் உட்பட, 200 க்கும் அதிகமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.கூட்டத்தில், 500 பேருக்கும் அதிகமான தேர்வு எழுதக்கூடிய ஏழு மையங்களில், கூடுதல் துறை அலுவலர் நியமிப்பது, வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களுக்கு பணி ஒதுக்கீடு, 27 வழித்தட அலுவலர்களுக்கான பணிகள் என்னென்ன என்பது குறித்து விளக்கப்பட்டது.முதன்மை கல்வி அலுவலர் கீதா பேசுகையில்,' தேர்வு மையங்களில் பணிபுரியும் முதன்மை கண்காணிப்பாளர் உட்பட அலுவலர்கள் கூடுதல் கவனமுடன் பணியாற்றிட வேண்டும். எவ்வித இடர்பாடுகளும், பிரச்னையும் ஏற்பட்டு விடக்கூடாது. சிக்கல்கள் நேரிட்டால், அதனை எப்படி களைய வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு அலுவலர்களும் தங்களுக்கென வழங்கப்பட்ட பணிகளை செவ்வனே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக பணியாற்ற வேண்டும்,' என்றார்.பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குத் தயாராகும் வகையில் தேர்வு மையங்கள் தயார்ப்படுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது.பறக்கும் படை தயார்முதன்மை கண்காணிப்பாளர் உட்பட பிளஸ் 2 தேர்வு பணிக்கு, 2,235 அலுவலர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்வு முறைகேடுகளை தடுக்க, பொதுத்தேர்வு பணி, தேர்வெழுத மாணவ, மாணவியரை கண்காணிக்க, 197 ஆசிரியர்களை கொண்ட நிலையான, பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் திடீரென தேர்வு மையங்களில் நுழைந்து சோதனை நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு ஆலோசனை கூட்டத்தில், வழங்கப்பட்ட நிலையில், அந்தந்த தேர்வு மையங்களில், அறைக் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் நடப்பு வாரத்தில் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை