உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், சாகுபடி செய்யப்பட்ட கொண்டைக்கடலை நன்கு வளர்ச்சியடைந்துள்ள நிலையில், அறுவடை விரைவில் துவங்க உள்ளது.உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில், பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அவ்வகையில், இந்த சீசனில் விவசாயிகள், மானாவாரியாக கொண்டைக்கடலை சாகுபடி செய்துள்ளனர்.கடந்த, அக்., மாதம், வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயிகள் மானாவாரியாக கொண்டைக்கடலை சாகுபடி செய்தனர்.தொடர்ந்து, மழையின் தாக்கம் இம்மாதம் வரை நீடித்ததால், கடலைச் செடி நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. விரைவில், அறுவடை பணிகளை துவக்க திட்டமிட்டுள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது:பல இடங்களில், கொண்டைக்கடலை செடி நன்றாக வளர்ந்துள்ளது. ஆனால், செடிகளில், பூ விட்ட பிறகு, பெய்த மழையால், மகசூல் பாதித்துள்ளது. வழக்கமாக, ஏக்கருக்கு, 700 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இந்தாண்டு, மகசூல் பாதியாக குறையும் வாய்ப்புள்ளது.கொண்டைக்கடலை பயறு, புரச்சத்து உணவு பொருளாக உள்ளதால், மாவு உற்பத்திக்கு பெரிதும் பயன்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் கொண்டைக்கடலை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு, பிற நாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.