| ADDED : நவ 28, 2025 05:39 AM
திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மாணவர், 'நான் முதல்வன்' திட்டத்தால் தென்கொரியாவில் நடக்கும் உள்ளிடைப்பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு உயர்கல்வி துறைக்கான 'நான் முதல்வன்', 'ஸ்கவுட்' திட்டம் வாயிலாக, மாணவர்கள் வெளிநாடுகளில் பயிற்சி பெற்று நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவர். பலகட்டத் தேர்வுகளில் பங்கேற்ற, 7 ஆயிரம் பேரிலிருந்து, 21 மாணவர்கள் மட்டும் இந்த பயிற்சிக்கு தேர்வாகினர். அதில், ஒருவராக திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, மூன்றாம் ஆண்டு வேதியியல் துறை மாணவர் முஹம்மது அனஸ் தேர்வாகியுள்ளார். டிச. மாதம், முதல் வாரத்தில் தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தென்கொரியாவுக்கு செல்கின்றனர். பயிற்சிக்குப் பின், திறமை அடிப்படையில் வெளிநாட்டு நிறுவனங்கள் பணியமர்த்தும் வாய்ப்புள்ளது. சர்வதேச தரத்தில் திறமை, அறிவை வெளிப்படுத்தும் இந்த வாய்ப்பு, கல்லுாரி மாணவர்களுக்கு ஊக்கமளித்து முன்மாதிரியாகிறது. கோவை மண்டல மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மாணவரை, கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் செண்பகலெட்சுமி, சிக்கண்ணா கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், பேராசிரியர் கார்த்திகேயன், வேதியியல் துறை பேராசிரியர்கள், கல்லுாரி ஆட்சிக்குழுவினர், 'நான் முதல்வன்' திட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ், பிற பேராசிரியர்கள், முன்னாள் மாணவர் சங்கத்தினர் ஆகியோர் பாராட்டினர்.