திருப்பூர்: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டியில், சக்தி விக்னேஷ்வரா கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று, திறமைகளை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் மாணவர்களின் பகுத்தறிவு, சிந்தனையாற்றல் மற்றும் பொது அறிவு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 'தினமலர்' இதழின் மாணவர் பதிவான 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. படிப்பின் மீது ஆர்வத்தை ஊக்குவிக்க மாணவர்களுக்காக வினாடி - வினா போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி அளவில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். அவ்வகையில், திருப்பூர், பொங்குபாளையத்தில் உள்ள சக்தி விக்னேஷ்வரா கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளியில், இப்போட்டி நேற்று நடைபெற்றது. தகுதிச்சுற்றில், 72 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடந்த போட்டியில் 'எச்' அணி வெற்றி பெற்றது. அந்த அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் திவ்யேஷ் மற்றும் ரகுநாத் ஆகியோர், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று சிறப்பு பரிசுகளை வென்றனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் செயலாளர் தாமரைக்கண்ணன் மற்றும் துணை முதல்வர் யமுனாதேவி பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினர். கிப்ட் ஸ்பான்சர்கள் 'தினமலர்' நாளிதழுடன் எஸ்.என்.எஸ்.கல்விக் குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டியில், சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகிய நிறுவனங்கள் கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளனர். கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.