திருப்பூர்; திருப்பூர் - மங்கலம் ரோட்டில், 58 ஏக்கர் பரப்பளவில் ஆண்டிபாளையம் குளம் அமைந்துள்ளது. மங்கலம் நல்லம்மண் தடுப்பணையிலிருந்தும், ஓட்டணையிலிருந்தும் குளத்துக்கு தண்ணீர் வருகிறது. வெற்றி அமைப்பினரின் பராமரிப்பில் இருந்துவரும் இந்த குளத்தில், ஆண்டுமுழுவதும் தண்ணீர் தேங்கி, ரம்யமாக காட்சி அளிக்கிறது.நாட்டின் பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில், வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலளர் ஏராளமானோர் வசிக்கின்றனர். இரவு பகல் பாராமல் உழைக்கும் தொழிலாளர்களுக்கு, திருப்பூரில் போதிய பொழுதுபோக்கு, சுற்றுலா அம்சங்கள் இல்லை என்கிற குறை இருந்து வருகிறது.இதனால், ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரி துவக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதற்கு செவிசாய்த்த தமிழக அரசு, ஆண்டிபாளையம் குளத்தில் படகுசவாரி உருவாக்க, 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. சுற்றுலாத்துறை சார்பில், கடந்த ஆண்டு இறுதியில் ஆண்டிபாளையம் குளத்தில், படகு இல்லம், பார்வையாளர் மாடம், உணவகம், டிக்கெட் கவுன்டர், குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், ஆண்டிபாளையம் குளத்தில் சவாரி செல்ல, படகு வந்திறங்கியுள்ளது. படகு, தண்ணீரில் இறக்கப்பட்டு, கரையோரம் கட்டிவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார், ஆண்டிபாளையம் குளத்தில் படகு இல்லாம் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்; குளத்துக்கு படகு வந்திறங்கியதை பார்வையிட்டார். மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் கூறியதாவது:சுற்றுலா துறை சார்பில், ஆண்டிபாளையம் குளத்தில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. முதல்கட்ட சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. அழகுபடுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இன்னும் சில நாட்களில் அனைத்து பணிகளும் முடிவடைந்து, திருப்பூர் நகர மக்களின் சிறந்த பொழுதுபோக்கு தளமாக ஆண்டிபாளையம் குளம் மாறிவிடும்.குளத்தில் மேலும் என்னென்ன வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தலாம் என, தமிழ்நாடு சுற்றுலா வளர்சசி கழக மண்டல மேலாளர் குணேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் குணசேகரன் அடங்கிய சுற்றுலா திட்ட நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தி சென்றுள்ளனர். படகு சவாரிக்காக எட்டுபேர் பயணிக்கும் வகையிலான ஒரு மோட்டார் படகு வந்திறங்கியுள்ளது; சிலநாட்களுக்குள் மற்றொரு படகும் குளத்துக்கு வந்துவிடும். அடுத்த, 15 முதல், 20 நாட்களுக்குள் குளத்தில் படகு சவாரிக்கான வெள்ளோட்டம் பார்க்கப்படும். பணிகள் அனைத்தும் முடிவடைந்து, வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் படகு இல்லத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேகம் காட்டி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.------------ஆண்டிபாளையம் குளத்தில், பொதுமக்கள் சவாரி செல்ல தருவிக்கப்பட்டுள்ள படகு. சுற்றுலா மேம்பாடு குறித்து குளக்கரையில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுலா துறை அலுவலர்கள்.