உடுமலை : ஜல்லிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் கட்டடம், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தான முறையில் சிதிலமடைந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.உடுமலை ஒன்றியம் ஜல்லிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அதிகமான மாணவர் எண்ணிக்கை கொண்ட துவக்கப்பள்ளியாகவும் உள்ளது.சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்தும், மாணவர்கள் இங்கு விரும்பி வந்து படிக்கின்றனர். இவ்வாறு மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளியின் கட்டமைப்பு, மோசமான நிலையில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.இரண்டு வகுப்பறை கொண்ட ஒரு கான்கிரீட் கட்டடம், இரண்டு வகுப்பறை கொண்ட ஒரு ஓட்டு கட்டடமும் பள்ளி வளாகத்தில் உள்ளது. மழை காலம் துவங்கியது முதல், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழலாகவே பள்ளியில் உள்ளது.ஓடுகளால் அமைந்த மேற்கூரை மிகவும் சிதிலமடைந்தும், பழையதாகவும் இருப்பதால், மழை நாட்களில் வகுப்பறையில் குழந்தைகள் அமர முடியாத வகையில் மழைநீர் வருகிறது.மிகவும் பழைய ஓடுகள், அவ்வப்போது உடைந்தும் விழுகின்றன.கான்கிரீட் மேற்கூரையிலும் பல இடங்களில் விரிசல் விட்டிருப்பதுடன், மேற்கூரையின் பூச்சுகள் தொடர்ந்து கீழே விழுந்து வருகின்றன.இதுவரை குழந்தைகளுக்கு பாதிப்பில்லாத நிலையிலும், இனியும் நிகழாது என்பது கேள்விக்குறியாக உள்ளது.ஒரு ஊராட்சியின் அடிப்படை தேவையாக இருக்கும், அரசு பள்ளியின் கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இப்பிரச்னையில், ஊராட்சி நிர்வாகமும் அலட்சியமாக செயல்படுகிறது.அரசுப்பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்பு, பெற்றோரின் முதல் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், சிறிய மழைக்கும் மேற்கூரை சிதிலமடைந்து விழும் நிலையில் பள்ளிகட்டமைப்பு இருப்பதால் பெற்றோரின் அச்சம் மேலும் அதிகரிக்கிறது.உடனடியாக இப்பள்ளியில் மேற்கூரையை சீரமைத்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். ஆய்வு தான் நடந்தது
பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், 'மாணவர்கள் இல்லாத போது மேற்கூரை சிதிலமடைந்தது. இந்த சம்பவம் நடந்த உடன் உடனடியாக ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அலுவலர்கள் வந்து ஆய்வு நடத்தி, சீரமைப்பதற்கான பணிகளை விரைவில் துவக்கவும் கூறியுள்ளனர்' என்றனர்.இதே போல் உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள ஓட்டுக்கட்டடங்கள் கொண்ட அரசு பள்ளிகளிலும், மேற்கூரை சரியில்லாத நிலையில் உள்ளது. ஆனால், புகார் தெரிவித்தாலும் அவை சிறிய பழுதுகளாக இருப்பதாக ஒன்றிய நிர்வாகத்தினர் நிதி ஒதுக்காமல் புறக்கணித்து விடுகின்றனர்.ஒவ்வொரு மழைகாலத்தின்போதும் மேற்கூரை தொடர்ந்து பாதிக்கப்பட்டு நாளடைவில் இடிந்து விழும் நிலையில் அப்பள்ளி குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோசமான கட்டடங்களாக மாறுகின்றன.பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சிதிலமடைந்துள்ள ஓட்டுக்கட்டட அரசு பள்ளிகள் குறித்து கல்வித்துறை, ஒன்றிய நிர்வாகம் ஆய்வு செய்து சிறிய பழுதுகளையும் சரிபார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.