| ADDED : மார் 18, 2024 12:22 AM
திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மூளை, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் நியமித்து, 'லெவல் 1' நிலைக்கு தரம் உயர்த்த வேண்டும்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தலைமை மருத்துவ மனையாக, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இங்கு, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான சிறப்பு நிபுணர் மற்றும் டாக்டர் பணியிடம் இன்னமும் நிரப்பப் படவில்லை. மேற்கு மண்டலத்தில் கோவை, ஈரோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைக்கு தனி டாக்டர் குழு உள்ளது; ஆனால், மாவட்ட தலைநகராக திருப்பூரில், அதற்கான வசதி இல்லை.இதனால், விபத்தில் சிக்கி பலத்த காயம் ஏற்படுபவரை உடனடியாக கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்காகவே, திருப்பூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் மூன்றுக்கும் மேற்பட்ட, 108 ஆம்புலன்ஸ்கள், 24 மணி நேரமும், தயாராக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்நிலை மாற உடனடியாக, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் நியமிக்க வேண்டும்.'இன்னுயிர் காப்போம்' திட்டத்தில் விபத்தில் அடிபட்டவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கும் பொறுப்பு, 108 ஆம்புலன்ஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது. மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான வசதியுள்ள மருத்துவமனை மருத்துவத்துறையில் 'லெவல் 1' என வகைப்படுத்தப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனை மட்டுமே 'லெவல் 1' வகையில் உள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உட்பட மற்றவை, 'லெவல் - 2'. இதனால், பலத்த காயம் ஏற்பட்டு, உயிருக்கு போராடுபவரை, ஒரே ஒரு தனியார் மருத்துவமனை அல்லது கோவை அரசு மருத்துவ கல்லுாரிக்கு உடனடியாக அழைத்து வர வேண்டிய நிலை உள்ளது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை 'லெவல் 1' தரத்துக்கு உயர்த்தி விட்டால், நோயாளிகள் பயன்பெறுவர்.