| ADDED : மார் 15, 2024 01:40 AM
திருச்சி:திருச்சி, தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சூரியநாராயணன், 76. இவரது மகன் அமெரிக்கா, மகள்கள் மும்பை மற்றும் கோல்கட்டாவில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். தில்லைநகரில் தனியாக வசிக்கும் சூரியநாராயணனுக்கு, கடந்த மாதம், 19ம் தேதி மொபைல்போனில் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர், தன்னை சி.பி.ஐ., அதிகாரி என்று அறிமுகப்படுத்தினார். அந்த நபர், 'நீங்கள் ஹவாலா மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளீர்கள். 2 கோடி ரூபாய் வரை பணம் கைமாற்றி உள்ளீர்கள். உங்களை விசாரிக்க வேண்டும்' என்றார்.பின், 'உங்கள் வங்கிக்கணக்கு விபரங்களை எங்களுக்கு அனுப்புங்கள். விசாரணைக்கு பின் மீண்டும் அந்த பணத்தை வங்கியில் செலுத்தி விடுவோம்' என்று கூறினார். அதை உண்மை என நம்பிய அவர், வங்கி கணக்கு விபரங்களை கூறினார். அடுத்த நொடி, அவரது வங்கிக்கணக்கில் இருந்த, 50.80 லட்சம் ரூபாய் திருடப்பட்டது.திரும்ப வராததால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சூரியநாராயணன், இதுகுறித்து திருச்சி மாநகர 'சைபர் கிரைம்' போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.