விழுப்புரம்: எஸ்.ஐ.ஆர்., பணிகள் 72 சதவீதம் முடிந்துள்ள நிலையில், கனமழை எச்சரிக்கையால், 2 நாட்களில் படிவங்களை வழங்க வேண்டும். 2002க்கான வாக்காளர் பட்டியல் விபரம் தெரியாவிட்டாலும், பெற்றோர் பெயரை எழுதிக் கொடுத்தால் போதும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கியது. தற்போது, மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில், 17,27,490 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 16 லட்சத்து 59 ஆயிரத்து 265 பேருக்கு கணக்கீட்டு படிவங்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டு, படிப்படியாக திரும்ப பெறப்பட்டு, அவை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது. இதில், சிலருக்கு படிவங்கள் கிடைக்காமலும், படிவம் பெற்ற பலருக்கு, கடந்த 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் விவரங்கள் கிடைக்காமலும், படிவங்களை பூர்த்தி செய்து வழங்காமல் குழப்பத்தில் உள்ளனர். இதனால், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அப்படிவங்களை பூர்த்தி செய்து பெறும் பணியில் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இப்பணிகள் குறித்து, கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் கூறியதாவது: மாவட்டத்தில், நேற்று வரை இப்பணிகள் 72 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள வாக்காளர்கள் கணக்கீட்டு படிவம் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது. மாவட்டத்தில் 28ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், வாக்காளர்கள் 2 தினங்களுக்குள் கணக்கீட்டு படிவங்களை, தங்கள் பகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் விரைந்து ஒப்படைக்க வேண்டும். மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளுக்காக 1970 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 200 மேற்பார்வையாளர்கள் பணியில் உள்ளனர். பணி நெருக்கடியை தவிர்க்க, இவர்களுக்கு உதவிடும் வகையில், பிற துறைகளை சார்ந்த 2000 தன்னார்வளர்கள், ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர்கள், தங்களின் கணக்கெடுப்பு படிவங்களில் தங்கள் விபரங்களையும், கடந்த 2002ல் இருந்த வாக்காளர் பட்டியல் விபரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். 2002 பட்டியல் விபரங்கள் கண்டறிய முடியவில்லை என்றால், பொதுமக்கள் சிரமப்பட வேண்டாம். அந்த கணக்கீட்டு படிவத்தில் தங்களின் தாய், தந்தையரின் பெயர், தொலைபேசி எண் போன்ற கிடைக்கும் விவரங்களை பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைத்தால் போதும். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், கடந்த 2002 வாக்காளர் பட்டியல் விவரங்களை கணினி மூலம் கண்டறிந்து, அவர்கள் பூர்த்தி செய்து கொள்வார்கள். அலுவலர்கள் பூர்த்தி செய்த 2002 வாக்காளர் பட்டியல் விபரத்தினை, வாக்காளர்களிடம் தொலைபேசி வாயிலாகவும் தெரிவிப்பார்கள். எனவே 2002 வாக்காளர் பட்டியல் தெரியவில்லை என, வாக்காளர்கள் அச்சப்பட வேண்டாம். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
உதவிக்கு அழைக்கலாம்
இந்த சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சந்தேகம் மற்றும் புகார்களுக்கும் படிவம் கிடைக்காதவர்களும், கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 1950 எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் தொகுதி வாரியாக, செஞ்சிக்கு 04145 - 222007, மயிலம் 04147 - 239449, திண்டிவனம் (தனி) 04147 - 222090, வானுார் (தனி) 0413-2677391, விழுப்புரம் 04146- 222554, விக்கிரவாண்டி 04146-233132, திருக்கோவிலுார் 04153-252316 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.