|  ADDED : பிப் 25, 2024 05:20 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
மரக்காணம் :  மரக்காணம், பக்கிங்காம் கால்வாய் மரப்பாலம் திடீரென உள்வாங்கியதால் போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் வரை உள்ள இரு வழிச் சாலை கடந்த 2022ம் ஆண்டு முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் நான்குவழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.மரக்காணத்தில் இருந்து ஆந்திர மாநிலம், காக்கிநாடா வரை செல்லும் பக்கிங்காம் கால்வாயின் நடுவே ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட மரப்பாலம் பழுதானதால், கான்கிரீட் பாலம் கட்டப்பட்டது.இந்த பாலத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டதால் கடந்தாண்டு நெடுஞ்சாலைத் துறையினர் பழுது நீக்கி புதுப்பித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலத்தின் பக்கவாட்டு பகுதிகளில் திடீரென உள்வாங்கியது.அதனைத் தொடர்ந்து, பாலம் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது.  மரக்காணத்தில் இருந்து திண்டிவனம் செல்லும் கனரக வாகனங்கள் மரக்காணம் இ.சி.ஆர்., வழியாக செங்கல்பட்டு மாவட்டம், வெண்ணாங்கப்பட்டு, சூனாம்பேடு, ஆலத்தூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.அதேபோல் திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் வரும் கனரக வாகனங்கள் முருக்கேரி, ஆலத்துார் கூட்ரோடு வழியாக சூனாம்பேடு, வெண்ணாங்கப்பட்டு வழியாக இ.சி.ஆரில் செல்ல வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையினர் அறிவித்துள்ளனர்.