உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / * சூப்பர் ரிப்போர்டர்

* சூப்பர் ரிப்போர்டர்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலவ நத்தத்தில் உள்ள அரசு கட்டிடங்கள் பயன்பாடு இன்றியும், பெரிய கண்மாய் பராமரிப்பு இன்றியும் உள்ளது.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது பாலவநத்தம் ஊராட்சி. இங்கு வடக்குப்பட்டி, தெற்குப்பட்டி, நடுப்பட்டி உட்பட பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்குள்ள கலையரங்கம் 2015ல், கட்டப்பட்டு பயன்பாடு இன்றி சேதமடைந்து கிடக்கிறது. விருதுநகர் ரோட்டில் ஊருக்கு நடுவில் பெரிய கண்மாய் பல ஏக்கரில் உள்ளது. முன்பு ஊருக்கும்அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக இருந்தது. விவசாயத்திற்கும் பயன்பட்டது. தற்போது கண்மாய் பராமரிப்பு இன்றி சீமை கருவேல மரங்கள், முட்புதர்கள் அடர்த்தியாக வளர்ந்தும் உள்ளன. கண்மாயில் குப்பை கொட்டப்பட்டும், கழிவுநீரும் விடப்படுகிறது. கண்மாயை பராமரித்து மழை நீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வடக்குபட்டியில் நூலகம் உள்ளது. இங்கு தினமும் மக்கள் படிக்க வருகின்றனர். கட்டடம் சேதம் அடைந்து கான்கிரீட் கம்பி வெளியில் தெரிகிறது. நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும். ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டப்பட்டு சிலமாதங்கள் பயன்படுத்திய நிலையில், பின்னர் பயன்படுத்தப்படாமலேயே கட்டடம் சேதம் அடைந்துஉள்ளது. காலனி உட்பட்ட தெருக்களில் வாறுகால்கள், ரோடுகள் அமைக்க வேண்டும். தெற்குப்பட்டியில் தேவையான வளர்ச்சிப் பணிகளை செய்ய வேண்டும். இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு காவலர் பணியில் அமர்த்த வேண்டும். கூடுதலாக பெட் வசதிகள் செய்யப்பட வேண்டும்.ஊரில் திருட்டுச் சம்பவங்கள், டூவீலர்கள் திருட்டு அதிகம் நடக்கின்றது. இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும். வடக்குப் பட்டியில் உள்ள மெயின் ரோடு சேரும் சகதியுமாக உள்ளது. புதியதாகவும், அகலமாகவும் ரோடு அமைக்க வேண்டும்.

கண்மாய் பராமரிப்புஅவசியம்

பாலமுருகன், டிரைவர்: பாலவநத்தம் ஊருக்கு நடுவில் இருக்கும் பெரிய கண்மாய் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி சுகாதாரக் கேடாக உள்ளது.முன்பு குளிப்பதற்கும் குடிப்பதற்கும் பல கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்தது.தற்போது கண்மாய் தண்ணீரை பயன்படுத்த முடியாத அளவில் சுகாதாரக் கேடாக இருக்கிறது. கண்மாயை தூர்வாரி பராமரிக்க வேண்டும்.

வீடுகள் கட்டி தர வேண்டும்

ஆனந்தவள்ளி, குடும்பத் தலைவி: வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்தில், எங்கள் தெற்குப்பட்டியில் உள்ளவர்களுக்கு சொந்த இடம் கூட இல்லை. எங்களுக்கு அரசு இடம் தந்து வீடும் கட்டி தர வேண்டும். எங்கள் பகுதியில் சொந்த நிலம் கூட இல்லாத நிலையில் பல பேர் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காட்சி பொருளான அரசு கட்டடங்கள்

பேச்சியம்மாள், குடும்பத்தலைவி: பாலவ நத்தத்தில் கலையரங்கம், ஊராட்சி மன்ற கட்டடம் உட்பட பல அரசு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இவை பயன்படுத்தப்படாமலேயே சேதமடைந்து கிடக்கின்றன. இங்குள்ள நூலக கட்டடம் சேதமடைந்து கிடக்கிறது. புதியதாக கட்டடம் கட்டித்தர வேண்டும். பயன் படாமல் உள்ள அரசு கட்டிடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை