| ADDED : ஏப் 27, 2024 02:02 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டட வரைபட அனுமதிக்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகரமைப்பு ஆய்வாளர் ஜோதிமணி 56, என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி வாசுதேவன், 48; விவசாயம் ,ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் நல்லகுற்றாலபுரம் தெருவில் வீடு கட்டுவதற்கு கட்டட வரைபட அனுமதிக்கு விண்ணப்பித்திருந்தார். அதற்கு ஒப்புதல் வழங்க நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் ஜோதிமணி, ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தரவிரும்பாத அவர் புகார் செய்தார்.லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை வாசுதேவனிடம் கொடுத்து அனுப்பினர். அதனை நேற்று காலை 11:00 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் வைத்து ஆய்வாளர் ஜோதிமணியிடம் , வாசுதேவன் கொடுத்துள்ளார். அப்போது விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி., ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், சால்வின்துரை தலைமையிலான போலீசார், அப்பணத்தை வாங்கிய ஜோதிமணியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் வசிக்கும் அவர் கடந்த ஓராண்டாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.