| ADDED : ஜூலை 30, 2024 06:15 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் பெண்களுக்கான நவீன சுகாதார வளாகம் சேதமடைந்தும், கட்டிமுடிக்கப்பட்டு ஆண்டுகள் ஆகியும் குடிநீர் இன்றி மேல்நிலை தொட்டி காட்சி பொருளாக உள்ளது.அருப்புக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்தது கோபாலபுரம் ஊராட்சி. இதில் 24 தெருக்கள் உள்ளன. ஊராட்சி அருகில் உள்ள இ-சேவை மையம் 8 ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கிறது. இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் வருவர். வளாகத்தை சுற்றிலும் முட்புதர்கள் சூழ்ந்துள்ளது. கிராமம் பகுதியில் இருந்து வரும் மக்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லை.ஊருக்குள் வராமல் கோபாலபுரம் சந்திப்பில் பஸ்கள் நின்று விடுவதால், இங்கிருந்து பயணிகள் ஊருக்கும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் நடந்தே செல்ல வேண்டி உள்ளது. இந்தப் பகுதியிலிருந்து வரும் மழைநீர் வரத்து ஓடையை துார்வாரியும், மடை குழியை உயர்த்தி கட்டினால், ஊருக்குள் உள்ள தெப்பத்திற்கு தண்ணீர் வந்து சேரும். இந்த தெப்பம் ஊர் முழுவதற்கும் குடிநீர் ஆதாரமாக உள்ளது.ஊர் வழியாக புற நகர் ரோடு அமைக்கும் பணி நடக்கிறது. ரோட்டிற்கு மறுபுறம் மழை நீர் வரத்து ஓடை உள்ளது. இதை அடைத்து ரோடு போடப்பட்டு உள்ளதால் தெப்பத்திற்கு தண்ணீர் வர முடியாத நிலையில் உள்ளது. ரோட்டில் பாலம் கட்டி தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆதி திராவிடர் காலனியில் ஏற்கனவே உள்ள கழிப்பறை இடிந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மக்கள் ரோடு ஓரங்களை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். பெண்கள் கழிப்பறை இன்றி சிரமப்படுகின்றனர். பழைய கழிப்பறையை இடித்து விட்டு புதிய நவீன சுகாதார வளாகம் கட்ட வேண்டும்.இங்குள்ள மேல்நிலைத் தொட்டி ரூ.13.65 லட்சத்தில் கட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில் தொட்டியில் தண்ணீர் வசதி ஏற்படுத்தாததால் காட்சி பொருளாகவே உள்ளது. காலனி அருகில் உள்ள ஊருணியை துார்வார வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படும்
சசிகலா, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்: புறவழிச்சாலையில் பாலம் அமைத்து மழைநீர் ஓடையில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையம் வரை மினி பஸ் வந்து செல்ல அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். நிதி நிலைமைக்கு ஏற்ப ஊராட்சியில் பிற வளர்ச்சி பணிகள் செய்து தரப்படும்.-