| ADDED : ஆக 20, 2024 06:51 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் ராமசுப்பு. இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆசிலாபுரத்தில் நடத்தி வந்த நூற்பாலையை நஷ்டத்தால் மூடிவிட்டார்.தன் நுாற்பாலை மின் இணைப்பை நிரந்தரமாக துண்டிக்கவும், தொழில் துவங்கிய காலத்தில் செலுத்திய மின் இணைப்பு டெபாசிட் ரூ.1.50 லட்சத்தை திரும்பி தரவும் கோரி 2023 மார்ச் 1 ல் ராஜபாளையம் மின்வாரிய உதவி பொறியாளரிடம் மனு செய்தார். மின்வாரிய அதிகாரிகள் டெபாசிட் தொகையை வழங்காமல் தாமதம் செய்தனர்.இதனால் ராமசுப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவில், 'டெபாசிட் ரூ.1.50 லட்சத்தை திரும்ப வழங்கவும், இழப்பீடாக ரூ. 25 ஆயிரம், வழக்கு செலவு ரூ. 5 ஆயிரத்தை ராஜபாளையம் மின் பகிர்மான கழக இயக்குதல் மற்றும் பேணுதல் உதவி பொறியாளர், ராஜபாளையம் ரூரல் செயல் உதவி செயற்பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர், விருதுநகர் மின் பகிர்மானம், உற்பத்தி கழக கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் சேர்ந்தோ அல்லது தனித்தோ ராமசுப்புக்கு வழங்க வேண்டும்,' என்றனர்.