| ADDED : ஜூன் 27, 2024 11:55 PM
சிவகாசி : சிவகாசி அரசு மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட கண் சிகிச்சை பிரிவில் முதல் முறையாக 73 வயது முதியவருக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.சிவகாசி அரசு மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு முன்பு கண் சிகிச்சை பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது. கண் சிகிச்சை பிரிவில் சிவகாசி அருகே மண்குண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த குருசாமி என்பவரை சோதனை செய்த போது கண் புரை பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து குருசாமிக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து நவீன லென்ஸ் வைக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை செய்த கண் டாக்டர்கள் சரண்யா, பிரியதர்ஷினி, சீனியர் கண் மருத்துவ உதவியாளர் பால்ராஜ், குழுவினரை சுகாதாரத்துறை இணை இயக்குநர்பாபுஜி, முதுநிலை தலைமை டாக்டர் அய்யனார் பாராட்டினர். இதுகுறித்து தலைமை டாக்டர் அய்யனார் கூறுகையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு ஜூன் 17ல் தொடங்கப்பட்டது. தற்போது முதல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது. வாரத்தில்செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்கள் கண் சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. இங்கு கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு, கண் புரை அறுவை சிகிச்சைக்கு நவீன லென்ஸ் பொருத்தப்படுகிறது. இதனை சிவகாசி பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.