சிவகாசி : சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில்மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதை அடுத்து, நேற்று சோதனை அடிப்படையில் ரயில்வே கேட் மூடப்பட்டு மற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டது. மாற்றுப்பாதையில் அறிவிப்பு பலகை இல்லாததால் வெளியூர் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலப்பணி அடுத்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. இதையடுத்து மாற்றுப்பதையாக ஸ்ரீவில்லிபுத்துார்-சிவகாசி ரோட்டில் வரும் கனரக வாகனங்கள்தொழிற்பேட்டை, செங்கமலநாச்சியார்புரம், வெள்ளையாபுரம், சுக்கிரவார்பட்டி, வடமலாபுரம் சோதனை சாவடி வழியாக விருதுநகர் சாலை செல்ல வேண்டும். சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் செல்லும் கனரக வாகனங்கள் இதே வழியில் திரும்ப செல்ல வேண்டும்.புறநகர் பஸ்கள் தொழிற்பேட்டை, செங்கமலநாச்சியார்புரம், திருத்தங்கல் வழியாகவும், டவுன் பஸ்கள், கார்கள் தொழிற்பேட்டை, செங்கமலநாச்சியார்புரம், ஓய்.ஆர்.டி.வி பள்ளி ரயில்வே கேட் வழியாகவும் சிவகாசி செல்ல வேண்டும். சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் செல்லும் பஸ்கள் விளாம்பட்டி, வேண்டுராயபுரம், துரைசாமிபுரம், சாமிநத்தம் வழியாகவும், நகர் பஸ்கள் விளாம்பட்டி ரோடு, ஒதப்புளி, ஆணையூர் சாலை, அரசு கல்லுாரி, ஹவுசிங் போர்டு வழியாக ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு செல்ல வேண்டும்.இதற்காக ஜூலை 19, 20 ஆகிய இரு நாட்கள்ரயில்வே கேட்டை மூடி மாற்றுப்பாதையில் வாகனங்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 9:00 மணி அளவில் சாட்சியாபுரம் ரயில்வே கேட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டது. இதில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் நெரிசலை சரி செய்தனர். மாற்றுப்பாதையில் அறிவிப்பு பலகை இல்லாததால் வெளியூர் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கனரக வாகனங்கள், புறநகர் மற்றும் நகர் பஸ்கள்,வாகனங்கள் என அனைத்தும் ஒரே வழியில் சென்றதால் ஓய்.ஆர்.டி.வி பள்ளி ரயில்வே கேட், வேலாயுத ரஸ்தா ரோடு, போஸ்ட் ஆபிஸ் ரோடு ஆகியவற்றில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். பாலம் பணி தொடங்கும் முன் மாற்றுப்பாதையில் அறிவிப்பு பலகை வைப்பதுடன், நகர் பகுதியில் கனரக வாகனங்கள் வருவதை தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.