| ADDED : மார் 20, 2024 12:06 AM
விருதுநகர் : விருதுநகரில் பள்ளி, கல்லுாரிகளுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாமல், ஹெல்மட் அணியாமல் டூவீலரில் செல்பவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து சாகசத்தில் ஈடுபடுவதால் சக வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.விருதுநகரில் நாளுக்கு நாள் டூவீலர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வீட்டிற்கு ஒரு டூவீலர் இருந்த நிலை மாறி ஒவ்வொருவருக்கும் ஒரு டூவீலர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்து அதிகரித்து காலை, மாலை நேரங்களில் நகரின் முக்கிய ரோடுகள் வழியாக செல்வதே மிகுந்த சிரமமாக உள்ளது.இந்நிலையில் கல்லுாரிகளுக்கு மாணவர்கள் டூவீலரில் செல்வது அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் ஹெல்மட் அணிவதில்லை. இவர்களுக்கு போட்டியாக பள்ளி மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி பள்ளி சீருடை அணிந்து டூவீலரில் நண்பர்களுடன் சேர்ந்து செல்கின்றனர்.வீட்டின் அருகாமையில் உள்ள கடைகளுக்கு செல்ல டூவீலரை கொடுத்து அனுப்புவதில் இருந்து இந்த பிரச்னை துவங்குகிறது. அதன் பின் நாளடைவில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடங்களில் ஓட்டுவதற்கு பழகி கொள் என பெற்றோரே தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உடன் சென்று டூவீலர் ஓட்டுவதற்கு கற்றுக்கொடுக்கின்றனர்.இப்படி வாகனம் ஓட்வதற்கு கற்றுக்கொண்ட பள்ளி மாணவர்கள் சக நண்பர்களுடன் சென்று சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் சோதனையில் எந்தெந்த பகுதிகளில் நிற்பார்கள் என நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு மற்றொரு வழியாக சென்று விடுகின்றனர்.இவர்களால் ரோட்டில் பயணிக்கும் சக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே விருதுநகரில் ஓட்டுநர் உரிமம் இன்றி, ஹெல்மட் அணியாமல் டூவீலரில் சாகசத்தில் ஈடுபடும் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.