| ADDED : ஜூன் 26, 2024 01:55 AM
தமிழகத்தில் உள்ள 11 மெத்தனால் தயாரிப்பு தொழிற்சாலைகளை கண்காணிப்பதில், கோட்டை விட்டதால், மரக்காணத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சியிலும் கள்ளச்சாராய உரிழிப்பு நிகழ்ந்துள்ளது.தமிழகத்தில் மொத்தமாக, 11 மெத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. மரக்காணம் கள்ளச்சாராய பலி சம்பவத்திற்குப் பிறகு, அவற்றில் உள்ள மெத்தனாலை சரிபார்க்கும் பணியை அரசு முடுக்கிவிட்டது. பெரும்பாலான கள்ளச்சாராய சாவுகளுக்கு, அவற்றில் மெத்தனால் கலப்பதே காரணமாக இருப்பதால் கடந்த 2002ம் ஆண்டு மெத்தனாலின் பயன்பாடு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் (1937)ன் கீழ் கொண்டு வரப்பட்டது.மெத்தனால் விநியோகத்தைக் கட்டுப்படுத்த, 1959ம் ஆண்டின் தமிழ்நாடு டீ நேச்சர்ட் ஸ்பிரிட், மெத்தில் ஆல்கஹால் மற்றும் வார்னிஷ் விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டன.இருப்பினும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு இந்த அபாயகரமான வேதிப்பொருள் ஏதோ வழியில் தொடர்ந்து சப்ளை ஆகிறது. இதனை கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் உறுதிப்படுத்தி உள்ளது.இதன் மூலம், ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களின் குடும்பங்களை, கள்ளச்சாராயம் சிதைப்பதும் தொடர்கதையாக மாறிவிட்டது.-நமது நிருபர் -