| ADDED : ஆக 17, 2024 02:10 AM
மதுரை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக வருவாய்த்துறை செயலர் அமுதாவிற்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.துாத்துக்குடி மாவட்டம் மேலகுட்டுடன்காடு லட்சுமி மாணிக்கம் தாக்கல் செய்த மனு: ஸ்ரீவைகுண்டம் அருகே மேலசேகரக்குடியில் பெரியகுளம் என்ற நீர்நிலை உள்ளது. விவசாயத் தேவைக்காக எங்களின் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது. இது தனியார் நீர்நிலை. எங்கள் உறவினர்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதை தனியார் நிலமாக அங்கீகரித்துறை வருவாய்த்துறையினரால் பட்டா வழங்கப்பட்டது.தனியார் நீர்நிலையாக இருக்கும்போது அதை பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் உள்ளதாக கலெக்டர் வகைப்படுத்தினார். அதனடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சட்டவிரோதமாக குளத்தில் வண்டல் மண் குவாரி நடத்த அனுமதித்தார். குளத்திலிருந்து மண் அள்ளி பாதை அமைப்பதற்காக அருகிலுள்ள ஒரு காற்றாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. காற்றாலைக்கு மண் அள்ள வசதியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.விவசாயிகளுக்கு வண்டல் மண்ணை இலவசமாக வழங்க உருவாக்கிய விதிகளுக்கு மாறாக இக்குளம் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அரசிதழில் சேர்க்கப்பட்டது. கலெக்டர், தாசில்தார் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.2023 டிச.,22ல் தனி நீதிபதி, 'சட்டவிரோதமாக குவாரி நடத்தியதற்கு பெரியகுளத்தின் பட்டாதாரர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். கலெக்டர் உள்ளிட்ட தவறு செய்த அதிகாரிகள் மீது நில நிர்வாக கமிஷனர், வருவாய்துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உத்தரவிட்டார்.இதை நிறைவேற்றாததால் வருவாய்த்துறை செயலர் அமுதா, நில நிர்வாக கமிஷனர் பழனிசாமி, துாத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.அமுதா, பழனிசாமி, லட்சுமிபதிக்கு நீதிபதி பி.புகழேந்தி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஆக.,20க்கு ஒத்திவைத்தார்.