உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீட் கிடைக்காத விரக்தியில் சொதப்பிய பீட்டர் அல்போன்ஸ்

சீட் கிடைக்காத விரக்தியில் சொதப்பிய பீட்டர் அல்போன்ஸ்

சீட் கிடைக்காத விரக்தியில் இருந்த பீட்டர் அல்போன்ஸ் ராகுல் பேச்சின் மொழிபெயர்ப்பையும் சொதப்பினார் என கட்சியினர் குறை கூறினர்.திருநெல்வேலியில் நடந்த ராகுல் பிரசார கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த எட்டு தொகுதிகளின் வேட்பாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி வேட்பாளர்கள் மட்டுமே வந்திருந்தனர்.பொதுக்கூட்ட மைதானம் முழுவதும் தி.மு.க., அரசின் காலை உணவு திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம் என சாதனைகளை கட் அவுட்டுகளாக வைத்திருந்தனர். காங்கிரசின் சாதனைகளுக்கோ தேர்தல் அறிக்கைக்கோ ஒரு கட் அவுட் கூட இல்லை.காரணம் பொதுக்கூட்ட மேடையையும் கூட்ட ஏற்பாடுகளையும் தி.மு.க.,வினரே முன் நின்று செய்ததால் காங்கிரசார் அதனை கவனிக்காமல் இருந்திருக்கலாம் என தெரிகிறது.திருநெல்வேலியில் போட்டியிட பீட்டர் அல்போன்ஸ்க்கு சீட் தராததால் அவர், துாத்துக்குடியிலும் கன்னியாகுமரியிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். திருநெல்வேலியில் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. நேற்றைய ராகுலின் ஆங்கில பேச்சை பீட்டர் அல்போன்ஸ் தமிழில் மொழிபெயர்த்தார். இருப்பினும் நிறைய இடங்களில் சொதப்பினார்.குறிப்பாக தென்மாவட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி தராதது குறித்து பேசிய ராகுல் நிவாரண தொகையை பிச்சை என பா.ஜ., கூறிய வரிகளில் தமிழ் வார்த்தையை பயன்படுத்தினார்.ஆனால் பீட்டர் அதனை குறிப்பிடாமல் கடந்தார். பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 8500 வழங்குவதை ரூ. 8000 என்றார்.நேற்று மாநில காங்., தலைவர் செல்வ பெருந்தகையின் பத்திரிகையாளர் சந்திப்பை மூத்த தலைவர் தங்கபாலு, தவிர்த்தார். திருச்சியில் மீண்டும் சீட் கிடைக்காத திருநாவுக்கரசர் மேடையில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். இதே மைதானத்தில் கடந்த மாதம் பிரதமர் மோடி பங்கேற்ற தேர்தல் பொதுக்கூட்டம் நடந்தது.அப்போது இருந்த கூட்டத்தில் பாதிகூட இல்லை என காங்கிரசாரே அங்கலாய்த்தனர்.கன்னியாகுமரி வேட்பாளர் விஜய் வசந்த் ஏற்பாடு செய்த கூட்டம் தான் பொதுக்கூட்ட வளாகத்தில் தெரிந்ததே தவிர துாத்துக்குடி, திருநெல்வேலியில் இருந்து பங்கேற்றவர்கள் மிகவும் குறைவு என்றனர் காங்., நிர்வாகிகள்.முழுக்க தி.மு.க.,வினரின் ஏற்பாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரசார் கடமைக்கு வந்து போனதாகவே இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை