உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுச்சாவடிகளில் வி.ஐ.பி.,க்களுக்கு எழுந்து நின்று வணக்கம் சொல்ல தடை

ஓட்டுச்சாவடிகளில் வி.ஐ.பி.,க்களுக்கு எழுந்து நின்று வணக்கம் சொல்ல தடை

கரூர்:ஓட்டுச்சாவடி மையங்களுக்கு வரும், வி.ஐ.பி., க்களுக்கு எழுந்து நின்று வணக்கம் செலுத்துவது, சிறப்பு கவனிப்பு செய்வதை தவிர்க்க வேண்டும் என, ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தலின் போது, ஓட்டுச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள, தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் துணை அலுவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.

சிறப்பு கவனிப்பு கூடாது

அதில், ஓட்டுப்பதிவு அலுவலர் மற்றும் முகவர்கள் மொபைல் போனில் பேசுவது மற்றும் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும். ஓட்டுப்போட வரும் வி.ஐ.பி.,க்களுக்கு அலுவலர்கள் எழுந்து நின்று வணக்கம் செலுத்தக்கூடாது, சிறப்பு கவனிப்பு செய்யக்கூடாது.ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், முகவர்கள் முன்னிலையில் சரி செய்ய வேண்டும். மதியம், 3:00 மணிக்கு மேல் அரசியல் கட்சி முகவர்களை வெளியே செல்லவோ, மீண்டும் உள்ளே வரவோ அனுமதிக்க கூடாது. முகவர்கள் அரசியல் விஷயங்களை பேசக்கூடாது.பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் அழைத்தால் மட்டும் உள்ளே செல்ல வேண்டும். பாதுகாப்பு இடத்தை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை அல்லது வாக்காளர் சிலிப் கொண்டு மட்டுமே ஓட்டு போட முடியும். பிற ஆவணங்களை அடையாளத்துக்கு பயன்படுத்த கூடாது.

மை வைக்கும் முறை

வாக்காளர்களின் இடது கை ஆட்காட்டி விரலில் நகத்துக்கும், தோலுக்கும் மத்தியில் அழியாத மை வைக்க வேண்டும். இடது கையில் விரல்கள் இல்லாதபட்சத்தில், வலது ஆட்காட்டி விரலில் மை வைக்கலாம். அந்த விரலும் இல்லையென்றால், அதற்கடுத்த விரலில் மை வைக்கலாம்.இரண்டு கைகளிலும் விரல்கள் இல்லாதவர்களுக்கு, இடது மணிக்கட்டில் மை வைக்கலாம். இரண்டு கைகளுமே இல்லாதவருக்கு, இடதுகால் விரலில் மை வைக்கலாம். ஓட்டுச்சாவடி மையம் வந்தும், ஓட்டு போட முடியாதவருக்கு, தலைமை அலுவலர் ஓட்டு போட உதவி செய்ய வேண்டும்.இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை