| ADDED : ஜூன் 05, 2024 01:00 AM
திருச்சி:திருச்சி லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை ஜமால் முகமது கல்லுாரியில் நடந்தது. எண்ணிக்கை துவங்கியது முதலே ம.தி.மு.க., வேட்பாளர் துரை வைகோ முன்னிலை வகித்தார். ஓட்டு எண்ணிக்கைக்காக போடப்பட்டிருந்த, ஐந்தாவது டேபிளுக்கு ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கான ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரம் எடுத்து வரப்பட்டது. அதில் சீல் இல்லாமல் இருந்ததால், அதிகாரிகளும், முகவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.அதை எண்ணக்கூடாது என்று அனைத்து கட்சி முகவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இயந்திரத்தை திறக்காமல், அப்படியே வைத்து விட்டு, அடுத்த ஓட்டுப்பதிவு இயந்திரத்தை எடுத்து எண்ணினர். அந்த ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் ஆவணங்களை சரிபார்த்தபோது, ஓட்டுப்பதிவின் போது, அனைத்து முகவர்களும் கையெழுத்திட்டு இருந்தது தெரிந்தது. எண்ணிக்கைக்கு வந்த அனைத்து முகவர்களும் ஒப்புக்கொண்டதால், அந்த இயந்திரத்தின் ஓட்டுகளும் எண்ணப்பட்டன.