உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியார் பள்ளிகளின் விண்ணப்பம் முடிவெடுக்க அரசுக்கு அவகாசம்

தனியார் பள்ளிகளின் விண்ணப்பம் முடிவெடுக்க அரசுக்கு அவகாசம்

சென்னை : தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப் பிரிவுகளில் விலக்கு கோரிய விண்ணப்பங்களின் மீது, தமிழக அரசு முடிவெடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது. திருச்சியைச் சேர்ந்த, புனித அன்னாள் கன்னியாஸ்திரியர் சபை தலைவர் ரெஜினால் என்பவர் தாக்கல் செய்த மனு:எங்கள் சபையின் கீழ், அரசு உதவி பெறும் 48 பள்ளிகள், 29 சுயநிதி பள்ளிகள் உள்ளன. கிறிஸ்துவ சிறுபான்மை கல்வி நிறுவனங்களாக அவை அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. எந்த குறுக்கீடும் இன்றி, நிர்வாகம் மேற்கொள்ள சிறுபான்மை நிறுவனங்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.கடந்த 2018ல் தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தை, அரசு இயற்றியது; அதற்கான விதிகளை வகுத்து, 2023 ஜனவரியில் கெஜட்டில் வெளியிடப்பட்டது. தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள சில பிரிவுகள், விதிகள், எங்களின் நிர்வாகத்தில் குறுக்கிடுவதாக உள்ளன.ஒரு பள்ளியை துவங்க, நிர்வகிக்க, குறிப்பிட்ட கல்வி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அரசியலமைப்பு சட்டத்தின்படி, கல்வி நிறுவனங்களை விருப்பப்படி துவங்க, சிறுபான்மையினருக்கு உரிமை உள்ளது.கூடுதல் பிரிவு, புதிய பாடப்பிரிவு துவங்குவதற்கான விதிகள், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, எங்கள் உரிமையில் குறுக்கிடும் வகையிலான, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் சில பிரிவுகள் மற்றும் விதிகளை ரத்து செய்ய வேண்டும்; விசாரணை முடியும் வரை தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இது போன்று பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், தற்போதைய நிலை தொடர உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மனுக்கள், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தன.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், வழக்கறிஞர் மேரி சவுமி ரெக்ஸ் உள்ளிட்டோர் ஆஜராகினர். சட்டப்பிரிவுகளில் விலக்கு கோரி, சிறுபான்மை பள்ளிகள் தரப்பில் அரசுக்கு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''விண்ணப்பங்கள் அரசின் பரிசீலனையில் உள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் தற்போது அமலில் உள்ளதால், முடிவு எதையும் அறிவிக்க முடியாது,'' என்றார். இதையடுத்து, விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க அரசுக்கு அவகாசம் வழங்கி, விசாரணையை ஜூன் 25க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது; ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீட்டித்தும் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை