சென்னை: சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், விருப்ப மனு பெறும் பணி நேற்று துவங்கியது. தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், வரும் ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு என, அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின் றன. அ.தி.மு.க., சார்பில், போட்டியிட விரும்புவோர், டிச., 15 முதல் 23ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், நேற்று விருப்ப மனு பெறும் பணி துவங்கியது. காலை 10:30 முதல், பகல் 12:00 மணி வரை எமகண்டம் என்பதால், பகல் 12:00 மணிக்கு பிறகே, விருப்ப மனு வினியோகம் துவங்கியது. சென்னை புறநகர் மாவட்டச் செயலர் கந்தன், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, இடைப்பாடி தொகுதியில் போட்டியிட, முதல் விருப்ப மனு வாங்கினார். அதைத் தொடர்ந்து, சோழிங்கநல்லுார் தொகுதியில் போட்டியிட, தனக்கு விருப்ப மனு வாங்கினார். தற்போது எம்.எல்.ஏ.,க்களாக உள்ள, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர்கள்கே.பி.முனுசாமி, - வேப்பனஹள்ளி தொகுதிக்கும், விஸ்வநாதன் - நத்தம் , பொருளாளர் சீனிவாசன்-திண்டுக்கல், தலைமை நிலையச் செயலர் வேலுமணி -தொண்டாமுத்துார், அமைப்பு செயலர்கள் சி.வி.சண்முகம் - மயிலம், தங்கமணி - குமாரபாளையம், ஜெயகுமார் -- ராயபுரம், ஜெயராமன் -- பொள்ளாச்சி தொகுதிகளில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு பெற்றனர். இவர்கள் அனைவரும் இடைப்பாடி தொகுதியில் பழனிசாமி போட்டியிட, 15,000 ரூபாய் செலுத்தி, விருப் ப மனு பெற்றனர். விருப்ப மனுக்களை பெற்ற எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், பூர்த்தி செய்த மனுக்களை, முனுசாமி, வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் வழங்கினர். மார்கழி 'சென்டிமென்ட்'
இன்று மார்கழி மாதம் பிறப்பதால், கார்த்திகை மாதத்திலேயே விருப்ப மனு வாங்கி விட வேண்டும் என்ற ஆர்வத்தில், ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, நேற்று விருப்ப மனுக்களை பெற்றனர். இதனால், அ.தி.மு.க., தலைமை அலுவலகம், நீண்ட இடைவெளிக்கு பின் கலகலப்பாக காணப்பட்டது.