உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அழிக்க முடியாத முத்திரை பதித்தவர்: பிரதமர் மோடி வாழ்த்து

அழிக்க முடியாத முத்திரை பதித்தவர்: பிரதமர் மோடி வாழ்த்து

சென்னை : 'வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதை நோக்கி, நாம் நம்பிக்கையுடன் நடைபோடும் இந்த வேளையில், கருணாநிதி போன்ற தலைவர்களின் தொலைநோக்கு பார்வையும், சிந்தனைகளும், நம் தேசத்தின் பயணத்தை தொடர்ந்து வடிவமைக்கும்' என, பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் நடந்தது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தி: கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நடப்பது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவரான கருணாநிதிக்காக நடக்கும் முக்கியமான விழா.அவர், இந்திய அரசியல், இலக்கியம், சமூக பணிகள் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய தலைவர். தமிழகத்தின் வளர்ச்சியிலும், நாட்டின் முன்னேற்றத்திலும், எப்போதும் அக்கறை கொண்டவராக திகழ்ந்தார். சிறந்த அரசியல் தலைவராக விளங்கிய கருணாநிதி, பலமுறை மக்களால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அப்பதவியில் இருந்து, சமூக வளர்ச்சி மற்றும் அரசியல் குறித்த, அவரது ஆழமான புரிதலை அடிக்கோடிட்டு காட்டும் வகையில், நம் நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார்.பன்முகத்திறமை கொண்டவர் அவர், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை வளர்த்தெடுக்க எடுத்த முயற்சிகள் இன்றும் மக்களால் நினைவு கூரப்படுகின்றன. அவரது இலக்கிய திறமை, அவரது படைப்புகளில் பிரகாசித்ததுடன், அவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டத்தையும் பெற்று தந்தது.அவரது நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடுவது, அவரது நினைவை போற்றும் விதமாகவும், அவர் நிலைநிறுத்திய லட்சியங்களை போற்றுவதாகவும் அமைந்துள்ளது. அவரது நினைவு நாணயம், அவரது மரபு மற்றும் அவரது பணிகளை என்றென்றும் நினைவூட்டும். இந்த முக்கியமான தருணத்தில், கருணாநிதிக்கு என் இதயப்பூர்வமான அஞ்சலி.வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதை நோக்கி, நாம் நம்பிக்கையுடன் நடைபோடுகிறோம். இந்த வேளையில், கருணாநிதி போன்ற தலைவர்களின் தொலைநோக்கு பார்வையும், சிந்தனைகளும், நம் தேசத்தின் பயணத்தை தொடர்ந்து வடிவமைக்கும். கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா வெற்றி அடைய வாழ்த்துகள்.இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.விழாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

ராகுலும் வாழ்த்து

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வெளியிட்ட வாழ்த்து செய்தி: கருணாநிதி நுாற்றாண்டு விழாவில், தமிழக மக்களுக்கு அன்பான வாழ்த்துகள். அவரது வியத்தகு வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை போற்றும் வகையில், நினைவு நாணயம் வெளியிடப்படுவது மகிழ்ச்சி. கருணாநிதியின் சமூக ரீதியான முற்போக்கு பார்வையும், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், கோடிக்கணக்கான மக்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ வழிவகுத்தது. அவரது உறுதியான தலைமையின் கீழ், தமிழகம் ஒரு திடமான லட்சிய பாதையில் சென்றுள்ளது. அவரது கருத்தியல் தெளிவும், மாற்றத்திற்கான அர்ப்பணிப்பும், தமிழகம் பல்வேறு துறைகளில், தன்னை முன்னோடி மாநிலமாக நிலைநிறுத்திக் கொள்ள உதவியது. பல மாநிலங்கள் பெரிய கனவுகள் காண ஊக்கம் அளித்துள்ளது. இந்நிகழ்வில், முதல்வர் ஸ்டாலினையும் பாராட்ட விரும்புகிறேன். அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய இந்தியாவை பாதுகாப்பதில், அவரது அசைக்க முடியாத உறுதியை பாராட்டுகிறேன். இவ்வாறு, ராகுல் கூறியுள்ளார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளதுடன், 'கருணாநிதியின் கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்து ஒன்றிணைந்து பாடுபடுவோம்' என்று, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சுலைமான்
ஆக 19, 2024 16:32

ஆம்.... இணைவி என்றார்... பின் துணைவி என்றார்....பின் யாரென்று தெரியாதென்றார்..... ஆனால் கனியை மட்டும் மகளென்று முத்திரை பதித்தார்..... இவர் இசை வேளாளராம்.... இவரது மகள் நாடாராம்... இதுதான் அவர் விட்டுச் சென்ற முத்திரை.....


Ramesh Sargam
ஆக 19, 2024 14:12

அழிக்க முடியாத முத்திரை பதித்தவர்... இதற்கு வேறு ஒரு அர்த்தமும் உண்டு.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை