உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காந்தி குறித்து தவறாக பேசவில்லை: கவர்னர் ரவி கவர்னர் ரவி விளக்கம்

காந்தி குறித்து தவறாக பேசவில்லை: கவர்னர் ரவி கவர்னர் ரவி விளக்கம்

சென்னை: கவர்னர் ரவி நேற்று ெவளியிட்ட அறிக்கை:கடந்த நான்கு நாட்களாக, தேசத்தந்தை காந்தியை, நான் அவமரியாதை செய்ததாக, சில ஊடக செய்திகள் தவறான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. காந்தி மீது உயரிய மதிப்பை கொண்டுள்ளேன். அவரது போதனைகள் என் வாழ்க்கையின் லட்சியங்கள்.கடந்த 23ம் தேதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளில் நான் பேசியதில், சில வார்த்தைகளை தேர்ந்தெடுத்து, நான் பேசியதன் நோக்கத்தை, சில ஊடகங்கள் திசை திருப்பி விட்டுள்ளன. என் உரையில், நம் நாட்டின் சுதந்திரத்திற்காக நேதாஜி வழங்கிய பங்களிப்புகள், போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை, விரிவாக கூற முயன்றேன்.

கிளர்ச்சிகள்

பிப்., 1946ல் ராயல் இந்திய கடற்படை மற்றும் விமானப்படையில் நடந்த கிளர்ச்சிகள், நேதாஜியால் ஈர்க்கப்பட்டவர்களால் ஏற்பட்டது. இதனால் தான், 1947ல் சுதந்திரம் கிடைப்பதற்கான வேகமும், செயல் முறையும் துரிதமாகின என்ற கருத்தை பதிவு செய்தேன்.ஏனெனில் இந்த கிளர்ச்சிகள் காரணமாக, பிரிட்டிஷார் பீதி அடைந்தனர். சீருடையில் இருந்த இந்தியர்களை இனியும் நம்ப முடியாது. சொந்த பாதுகாப்பு இந்தியாவில் இருக்காது என்று பிரிட்டிஷார் கருதினர். இந்த கிளர்ச்சிகள், 1946 பிப்ரவரியில் நடந்தன.அதற்கு அடுத்த மாதமே, இந்தியாவை விட்டு வெளியேற போவதாக, ஆங்கிலேயர்கள் அறிவித்து, கிளர்ந்தெழுந்த இந்தியர்களின் உணர்வுகளை தணிக்கவும், கிளர்ச்சிகளை தடுக்கவும், அரசியல் நிர்ணய சபையை அமைத்தனர்.கடந்த 1942ல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம், அதன் தொடக்க வெற்றிக்கு பிறகு, வேகத்தை இழந்திருந்தது. இந்திய பிரிவினைக்கான, முஸ்லிம் லீக்கின் தீவிர நிர்ப்பந்தம் மற்றும் களத்தில் காணப்பட்ட எதிர்வினைகள் காரணமாக, தேசிய சுதந்திர இயக்கத்தில் உள் மோதல்கள் ஏற்பட்டன.

வாழ்வின் வழிகாட்டி

இவற்றை எப்படி சமாளிப்பது என்பதிலேயே, காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் பெரும் முயற்சிகள் மற்றும் ஆற்றலை பயன்படுத்த வேண்டியிருந்தன. அதனால், இந்தியாவை ஆங்கிலேயர் மேலும் சில ஆண்டுகளுக்கு ஆண்டிருக்கலாம். ஆனால், நேதாஜியின் ஆயுதப் புரட்சி ஏற்படுத்திய விளைவுகளால் அப்படி நடக்காமல் போனது. நான் பேசியவை அனைத்தும் ஆவணங்களின் அடிப்படையிலான உண்மைகளே.என் வாழ்வின் வழிகாட்டியாக, காந்தியின் போதனைகள் உள்ளன. அவரை அவமதிப்பது என் நோக்கம் இல்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை