ஓமலுார்:சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே பாகல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் விழா, தலைமை ஆசிரியர் அருளானந்தம் தலைமையில் நடந்தது. சேலம் மேற்கு பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள் வந்தவுடன், பிளஸ் 1 மாணவ - மாணவியர் அழைத்து வரப்பட்டனர். பின், எம்.எல்.ஏ., அருள் பேசுகையில், ''பள்ளியில், 1.23 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் வகுப்பறை கட்டும் பணி நடந்து வருகிறது. மாணவ - மாணவியர் சைக்கிளில் வரும்போது கவனமாக வர வேண்டும்,'' என்றார். நடத்த கூடாது
நேரமாகி விட்டதால், வேறு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என கூறி, உடனே சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படும் என அருள் தெரிவித்தார். அப்போது பாகல்பட்டி தி.மு.க., நிர்வாகிகள் சிலர், 'எங்களை பேச அழைக்காமல் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது' என, எம்.எல்.ஏ., அருளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு மைக் கீழே விழுந்தது.'அரசு விழாவில் மக்கள் பிரதிநிதிகள் மட்டும் பேச வேண்டும் என கூறி, மாணவ - மாணவியருக்கு முன் ஏற்பட்ட தகராறால் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்' என கூறி, இரண்டு முறை மாணவர்கள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கைகூப்பி எம்.எல்.ஏ., அருள் மன்னிப்பு கேட்டார். காமெடி
ஏற்கனவே இதே போல, வெவ்வேறு நிகழ்ச்சிகளில் இருமுறை டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆகியோர் காலில் விழுந்திருக்கிறார் அருள்.-